ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மதுரையில் மக்களவைத் தேர்தல் நடைபெறுமா? உயர் நீதிமன்றத்தில் வழக்கு

மதுரையில் மக்களவைத் தேர்தல் நடைபெறுமா? உயர் நீதிமன்றத்தில் வழக்கு

கள்ளழகர் திருவிழா

கள்ளழகர் திருவிழா

மதுரையில் ஏப்ரல் 18-ம் தேதி சித்திரை திருவிழா நடைபெறவுள்ளதால் வாக்குப்பெட்டிகள், காவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தகுந்த நேரத்தில் செல்ல முடியாத சூழல் ஏற்படும்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ள, ஏப்ரல் 18-ம் தேதி, மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் இது குறித்து விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்தை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இந்நிலையில் குறிப்பிட்ட அந்த காலத்தில் உலகப்புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா மதுரையில் நடைபெற உள்ளது.

அதிலும் குறிப்பாக 18-ம் தேதி காலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டமும், மாலையில் கள்ளழகர் எதிர்சேர்வையும் நடைபெறும். இதைத் தொடர்ந்து அடுத்த நாளான ஏப்ரல் 19-ம் தேதி, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் உள்ளது.

எனவே இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். வெளி மாவட்டங்களில் இருந்தும் பல ஆயிரம் பேர் வருவதால் வாக்குப்பதிவு குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம்

இதுதொடர்பாக, வழக்கறிஞர் பார்த்தசாரதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கில், ‘மதுரையில் ஏப்ரல் 18-ம் தேதி சித்திரை திருவிழா நடைபெறவுள்ளதால் வாக்குப்பெட்டிகள், காவலர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுவோர் தகுந்த நேரத்தில் செல்ல முடியாத சூழல் ஏற்படும். எனவே, மதுரையில் மட்டும் தேர்தலை தள்ளிவைக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, ’இது தொடர்பாக பார்த்தசாரதி தரப்பில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்றனர். மேலும் வழக்கின் அவசரம் கருதி தேர்தல் ஆணையத்திடம் கலந்து பேசி நாளை பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு அறிவுரை வழங்கினர்.

இதனால் திட்டமிட்டபடி மதுரையில் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கை நாளை விசாரிப்பதாகவும் நீதிபதிகள்அறிவித்துள்ளனர்.

அதேபோல, மதுரையில் தேர்தலைத் தள்ளிவைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினரும் கோரிக்கை வைத்தனர்.

அந்த கோரிக்கையின் அடிப்படையில், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, ’சித்திரை திருவிழா தொடர்பாக அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே, அறிவித்தபடி மதுரையில் தேர்தல் நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Also see:

First published:

Tags: Elections 2019, Lok Sabha Key Constituency