அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், தொடர்புடைய 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், அவர் வருமானத்திற்கு அதிகமாக 11.32 கோடி ரூபாய் சொத்து குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அவரின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திர மோகன், மருமகள் வைஸ்னவி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கே.பி. அன்பழகன் கடந்த அதிமுக ஆட்சியில் 2016-2021- ல் உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். இவர் தனது பதவி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சுமார் 11.32 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மேலும் அவர் தனது மனைவி, மகன் உள்ளிட்டவர்களின் பெயர்களில் சொத்துகள் வாங்கி குவித்ததாக, வழக்குப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கே.பி.அன்பழகன் முதல் குற்றவாளியாகவும், அவரது மனைவி மல்லிகா 2ஆவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். அவரது மகன்கள் சசிமோகன், சந்திர மோகன் ஆகியோர் 3 மற்றும் 4வது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அன்பழகனின் மருமகள் வைஷ்ணவி மீதும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2016 ஏப்ரல் முதல் 2021ஆம் ஆண்டு மார்ச் வரை அன்பழகனின் சொத்து மதிப்பு 21, 43, 25 ,418 ரூபாயாக இருந்தது என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும் இக்காலக்கட்டங்களில் 10 கோடியே 10 லட்சம் ரூபாய் வரைதான் அவரின் சொத்து மதிப்பாக இருக்க வேண்டுமென லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி கே.பி.அன்பழகன் 11,32,95,000 ஆயிரம் ரூபாயை வருமானத்துக்கு அதிகமாக சேர்த்ததாக வழக்குப்பதிவு விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More : கும்பகோணத்தில் தயாராகிறது பிபின் ராவத் ஐம்பொன் சிலை : டெல்லியில் நிறுவ திட்டம்
இதனிடையே தருமபுரி மாவட்டம் காளப்பனஹள்ளி கிராமத்தில் தனது மருமகன் ரவிசங்கர் பெயரில் அன்பழகன் கல் குவாரியை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் காரிமங்கலம் தாலுகாவில் மைத்துநர்கள் சரவணன், செந்தில்குமார் ஆகியோரது பெயர்களில் எஸ்.கே.புளூ மெட்டல் (SK Blue metal) நிறுவனம் செயல்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Must Read : டி.ஆர்.பாலு வீட்டில் கொள்ளை...வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்
இதேபோல் சென்னை கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலையில் அன்பழகனின் தங்கை மகள் தீபா மற்றும் அவரது கணவர் சிவக்குமார் பெயர்களில் கிரானைட் ஆலை செயல்படுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது. தெலங்கானா மாநிலம் கரிம்நகரில் செயல்படும் "வைஷ்ணவி கிரானைட்" நிறுவனத்தில் சிவக்குமாருக்கு 80 சதவீத பங்குகள் உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.