திருச்சி பொன்நகர் காமராஜபுரம்
ரேஷன் கடையில், நேற்று முன்தினம் பிரதமர்
மோடியின் படத்தை
பாஜக கண்டோன்ட்மென்ட் மண்டல் தலைவர் மாட்டினார். அவர் மாட்டிச் சென்ற சிறிது நேரத்தில் அந்த படத்தை உடைத்த சிலர், அதை சாக்கடை கால்வாயில் வீசிச் சென்றனர்.
தகவலறிந்த பாஜகவினர் அங்கு திரள, ஏற்கனவே அங்கிருந்த திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுகுறித்து இருதரப்பினரும் கண்டோன்ட்மென்ட் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையினர் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.
அவர்களுக்கு போலீசார் அனுமதி மறுக்கவே, இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற, 100க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், பாஜக கொடுத்த புகாரின் பேரில், திமுக கவுன்சிலர் ராமதாஸ், பந்தல் ராமு, ஆட்டோ கருணாநிதி மீது, 4 பிரிவுகளின் கீழ் கண்டோன்ட்மென்ட் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாஜகவினர் மீது வழக்கு
இதனிடையே, ரேஷன் கடையில் மோடியின் படத்தை மாட்டிய, மண்டல் தலைவர் பரமசிவம், சத்தியகலா, விஜயகுமார் உள்ளிட்ட, 5 பேர் மீதும், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், ரேஷன் கடை விற்பனையாளர் சுகுமாரன் கொடுத்த புகாரின் பேரில், 'அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல்' உள்ளிட்ட பிரிவுகளில், 5 பாஜகவினர் மீது கூடுதலாக ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Also read... மதுரையில் விஷவாயு தாக்கி மூவர் உயிரிழப்பு - விசாரணை நடைபெறுவதாக அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
மோடி படம் உடைப்பு சம்பவம் நேற்று முன்தினம் காலை நடந்ததும், இருதரப்பினரும் அன்றே போலீசில் புகார் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
இருதரப்பினரின் மீதும் தலா, 4 நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
பாஜக மீது, சட்ட விரோதமாக ஒன்று கூடுதல், அத்துமீறி அரசு அலுவலத்தில் நுழைவது, கைகளால் தாக்குவது, கொலை மிரட்டல் விடுவது.
திமுக மீது, சட்டவிரோதமாக ஒன்று கூடுதல், அரசு அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, பிரதமர் படத்தை உடைத்தது, கைகளால் தாக்குவது, கொலைமிரட்டல் விடுத்தது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.