தேர்தல் பரப்புரையின் போது செந்தில் பாலாஜிக்கு பாஜக துணைத்தலைவரும் அரவக்குறிச்சி பாஜக வேட்பாளருமான அண்ணாமலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி இருந்தார். மேலும், தனது காவல்துறை பதவிகாலத்தை குறிப்பிடும் வகையில் தனது கர்நாடக முகத்தை யாரும் பார்த்தது இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அவர் பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அண்ணாமலை மீது கொலை மிரட்டல், தேர்தல் விதிமீறல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் அரவக்குறிச்சி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை, தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதி நீக்கம் செய்யக் கோரி பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக வேட்பாளர் கயல்விழியை ஆதரித்து பிரசாரம் செய்த
உதயநிதி ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி ஆகியோர் நரேந்திர மோடியால் தான் உயிரிழந்தனர் என பேசியிருந்தார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,
தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் மனுவில், தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வரும் உதயநிதியின் தேர்தல் பிரசாரத்திற்கு தடை விதிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.