Home /News /tamil-nadu /

மாமல்லபுரம் முதலை பூங்காவில் உள்ள முதலைகளை இடம் மாற்றுவதை எதிர்த்து வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மாமல்லபுரம் முதலை பூங்காவில் உள்ள முதலைகளை இடம் மாற்றுவதை எதிர்த்து வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை முதலைப் பண்ணை

சென்னை முதலைப் பண்ணை

இடமாற்றம் செய்ய அனுமதியளித்தது சட்டவிரோதம் என அறிவித்து, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார்.

மாமல்லபுரம் முதலை பூங்காவில் இருக்கும் 1000 முதலைகளை குஜராத்திற்கு இடம் மாற்றம் செய்வதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை வடநெம்மேலியில் உள்ள முதலைப் பண்ணையில், 17 வகைகளை சேர்ந்த சுமார் 2,000 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

ஆசியா கண்டத்திலேயே அதிக முதலைகள் பராமரிக்கப்படும் பண்ணையாக இந்த முதலைப்பண்ணை திகழ்ந்து வருகிறது. இங்கே பராமரிக்கப்படும் பெரும்பாலான முதலைகள் சதுப்புநில முதலைகள் ஆகும். இத்தகைய பெருமை வாய்ந்த முதலைப்பண்ணையில், நாள் ஒன்றுக்கு கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி என சுமார் 500 கிலோ இறைச்சி வரை முதலைகளுக்கு உணவாக வழங்கப்பட்டு வந்தது.

இந்த சூழலில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக நிதி நெருக்கடியில் முதலைப் பண்ணை தவித்துவருகிறது.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக பார்வையாளர்கள் வரத்து குறைந்ததால் முதலை பண்ணைக்கு வருவாய் குறைந்தது. இதனால் முதலைகளை பராமரிக்க முடியவில்லை என்பதாலும், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையிலும் சிக்கி தவித்த முதலை பண்ணை நிர்வாகத்தினர் இங்குள்ள முதலைகளை விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்படி வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினர்.

இதனை ஏற்ற மத்திய உயிரியல் பூங்கா ஆணையம், இங்குள்ள கரியால், நன்னீர், சதுப்பு நில முதலைகள், அமெரிக்க முதலைகள், ஆப்பிரிக்கா மெல்லிய தாடை முதலைகள், சையாமிஸ் முதலைகள், உப்பு நீர் முதலைகள் உள்ளிட்ட பல்வேறு வகைகளை சேர்ந்த 350 ஆண் முதலைகள், 650 பெண் முதலைகள் என மொத்தம் ஆயிரம் முதலைகளை இங்கிருந்து குஜராத்திற்கு இடமாற்றம் செய்ய அனுமதி வழங்கியது.

இந்நிலையில், மாமல்லபுரம் முதலை பூங்காவில் இருக்கும் 1000 முதலைகளை குஜராத்திற்கு இடம் மாற்றம் செய்வதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஏ.விஷ்வநாதன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மாமல்லபுரத்தில் இயங்கி வரும் முதலை பூங்காவில் கூடுதலாக இருக்கும் ஆயிரம் முதலைகளை குஜராத் மாநிலம் ஜாம் நகர் மாவட்டத்தில் உள்ள விலங்கியல் மறுவாழ்வு மையத்திற்கு இடமாற்றம் செய்ய மத்திய, மாநில அரசு துறைகள் அனுமதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

250 ஏக்கரில் சிறுத்தைகள், கரடிகள் உள்ளிட்ட 79 வகையான உயிரினங்களுடன் சிறிய அளவிலான வன விலங்கு பூங்கா அமைக்க 2019ஆண்டு விண்ணப்பித்து, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரைக்கும் மட்டுமே அனுமதி பெற்றுள்ளதாகவும், 56 முதலைகளை மட்டுமே வைக்கக்கூடிய 7300 சதுர மீட்டர் இடத்தில் 1000 முதலைகள் அடைக்கப்போவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இடமாற்றம் செய்ய அனுமதியளித்தது சட்டவிரோதம் என அறிவித்து, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். மேலும், சட்ட விரோதமாக அனுமதியளிக்கப்பட்டதாக தொடர்பாக சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக அரசின் வன விலங்கு காப்பாளர், மத்திய வன உயிரின ஆணையம், குஜராத்தில் உள்ள கிரீன்ஸ் வனவிலங்குகள், மீட்பு, மறுவாழ்வு மையம், மாமல்லபுரம் முதலை பூங்கா நிர்வாகம் உள்ளிட்டோர் 3 வாரங்களில் பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
Published by:Esakki Raja
First published:

Tags: Crocodile

அடுத்த செய்தி