கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களித்ததால் ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 அதிமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக உள்ளிட்ட தரப்பு தாக்கல் செய்த மனுக்கள் மீது விசாரணை நடத்தும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டு பிப்ரவரியில் அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது, எடப்பாடி பழனிசாமி அரசு பொறுப்பேற்றது. அப்போது, பெரும்பான்மையை நிரூபிக்க நடந்த வாக்கெடுப்பில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எதிராக வாக்களித்தனர்.
பின்னர், அடுத்த சில மாதங்களில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைந்தனர். இதற்கிடையே, கட்சியின் கொறடா உத்தரவை மீறி ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 பேரும் வாக்களித்ததால் அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக உள்ளிட்ட தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது.
எனினும், ஓராண்டுக்கும் மேலாக இந்த வழக்கு விசாரணை ஏதும் இல்லாமல் நிலுவையில் இருந்தது. கடந்த வாரம் தலைமை நீதிபதியை சந்தித்து திமுக தரப்பில் முறையிடப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு பிப்ரவரி 4-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.