வேட்புமனுவில் தவறான தகவல்களை அளித்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ப.ரவீந்திரநாத் எம்.பி மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், 2019-ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் ப.ரவீந்திரநாத் ஆகியோர், தங்களின் வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்தும், தவறான தகவல்களையும் தெரிவித்திருந்ததாகக் கூறி, இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி, தேனி எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை சிறப்பு நீதிமன்றத்தில் தேனி மாவட்ட திமுக முன்னாள் நிர்வாகி மிலானி என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஓ.பன்னீர்செல்வம், ப.ரவீந்திரநாத் எம்.பி மீதான புகார்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிப்ரவரி 7ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தேனி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, ஓ.பன்னீர் செல்வம் மற்றும் ஓ.ரவீந்திரநாத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் காவல்துறையினர் சம்மன் அனுப்ப வாய்ப்புள்ளதால் இந்த வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் தரப்பில் வாதிடப்பட்டது. காவல் துறைதுறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டதையடுத்து, மனு தொடர்பாக காவல்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 1ம் தேதிக்கு தள்ளி வைத்தார். அதுவரை இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.