மேற்கு தொடர்ச்சி மலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிகம் விளையும் மிக முக்கியமான வாசனை திரவிய பொருட்களில் ஒன்று ஏலக்காய். இந்த ஏலக்காய் பலகாரங்களுக்கு மட்டும் பயன்படுவதல்ல. மாலை தயாரிப்பதற்கும் வியாபாரிகள் பயன்படுத்துகின்றனர். திருமணங்களில் மணமக்களுக்கு அணிவிப்பதற்கும், கோவிலில் சுவாமி சிலைகளுக்கு சூட்டுவதற்கும் மட்டுமல்லாமல், அரசியல் தலைவர்களை கவுரவப்படுத்தவும், ஏலக்காய் மாலை அணிவிக்கப்படுகிறது.
ஏலக்காயை நீரில் ஊற வைத்த பிறகு வாழை நார்களில் கோர்த்து மாலையாக பின்னுகிறார்கள். ஒரு கிலோ ஏலக்காய் 3000 ரூபாய் விலை போகும் நிலையில், ஒரு மாலை கிட்டத்தட்ட 4000 முதல் 12000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தொண்டர்கள் தங்களது மானசீக தலைவர்களுக்கு ஏலக்காய் மாலை அணிவித்து பெருமைப்படுத்தி வருகின்றனர். இதனால், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள பூ மார்க்கெட்டில் மிக நேர்த்தியாக கட்டப்படும் இந்த ஏலக்காய் மாலைகளுக்கு முன்கூட்டியே ஆர்டர்கள் குவிகின்றன.
அரசியல் கட்சியினரை கவரும் விதமாக, ஏலக்காய் மாலையில் அந்தந்த அரசியல் கட்சிக் கொடிகளின் நிறங்களைக் கொண்டு வியாபாரிகள் வடிவமைத்து வருகின்றனர். இதற்கு அரசியல் கட்சியினரிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.
இந்த மாலைகள் நிலக்கோட்டையிலிருந்து இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. டெல்லி கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் வந்து வாங்கிச்செல்கிறார்கள். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழில்கள் தற்போது படிப்படியாக மீண்டு வரும் நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தல் பூமாலை வியாபாரிகள் வாழ்வில் விடியலைக் கொண்டு வந்துள்ளது என்றே சொல்லாம்.
இந்த ஏலக்காய் மாலை மற்ற பூக்களினால் ஆகும் மாலைபோல் உதிரவோ அல்லது அழுகும் நிலை இல்லாததால் மனமும் நீண்ட நாட்கள் பயன்படுத்தக்கூடியதாக உள்ளதால் இந்த ஏலக்காய் மாலை பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.