இந்து மதத்தின் புதிர்கள் நூலை படித்துக்காட்ட நேரம் கொடுக்க முடியுமா என
பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விசிக பொதுச் செயலாளர் வன்னி அரசு கோரிக்கை விடுத்துள்ளார்.
மோடியும் அம்பேத்கரும் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மோடி குறித்து தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதில் மோடியும் அம்பேத்கரும் ஒரே பாதையில் பயணிக்கிறார்கள் என்ற வகையில் இளையராஜா கூறினார். இதையடுத்து, அம்பேத்கர் மோடியை சரிக்கு சரியாக பேசியது, அம்பேத்கர் ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக இளையராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினரும், ஆதரவு தெரிவித்து மற்றொரு பிரிவினரும் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து சமூகவலைதளங்களில் தெரிவித்து வந்தனர்.
இதனிடையே, பாஜக தலைவர் அண்ணாமலை, அம்பேத்கர் செய்ததையும் பிரதமர் மோடி செய்ததையும் ஆதாரப்பூர்வமாக எடுத்து வைத்து விவாதிக்க நான் தயார் என அண்ணன் திருமாவளவனை அழைக்கிறேன். அவர் சொல்லும் இடத்தில் அவர் சொல்லும் நேரத்தில் விவாதிக்கலாம் என்று கூறினார்.
நேருக்குநேர் விவாதிக்கலாம் மோடி, அமித் ஷாவை வரச் சொல்லுங்கள்..
இதைத்தொடர்ந்து, அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய திருமாவளவன், அம்பேத்கர் பற்றி பேச மோடியே தகுதியற்றவர் என்பதே எங்கள் குற்றச்சாட்டு. அம்பேத்கர் எழுதிய சாதியை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற புத்தகத்தை மோடி, அமித் ஷா படித்திருப்பார்களா? வாதம் செய்ய வேண்டுமானால், மோடிக்கும் திருமாவளவனுக்கும் இடையே வாதம் நடக்கட்டும்.
இதையும் படிங்க: மோடியை போன்றவர்கள் நாட்டுக்கு தேவை.. பிரதமரை விமர்சிப்பவர்கள் குறைபிரசவத்தில் பிறந்தவர்கள்: பாக்யராஜ் பேச்சு
இடம், நாள் குறிப்போம். எனென்றால், நான் மோடியை தான் விமர்சிக்கிறேன். மோடி அம்பேத்கருக்கு எதிரி என்று நான் கூறுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, அம்பேத்கர் செய்ததையும் பிரதமர் மோடி செய்ததையும் விவாதிக்க அண்ணன் திருமாவளவனை அழைத்திருந்தேன். ஆனால் இப்போது வரை அவரிடமிருந்து பதில் வரவில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், இந்து மதத்தின் புதிர்கள் நூலை படித்துக்காட்ட நேரம் கொடுக்க முடியுமா என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விசிக பொதுச் செயலாளர் வன்னி அரசு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்னி அரசு தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து விவாதிப்பதற்கு முன் #இந்துமதத்தின்புதிர்கள் (Riddles in Hinduism) நூலை தங்களிடம் கொடுத்து அதில் 10 பக்கம் மட்டும் படித்து காட்ட விரும்புகிறோம்.
நாளை கமலாலயத்தில் இருந்தால் நேரம் கொடுக்க இயலுமா? என பாஜக தலைவர் அண்ணாமலையை டேக் செய்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.