ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மதுரை ஆதீன மடத்தின் அடுத்த மடாதிபதி யார்? - சர்ச்சை கிளப்பும் நித்யானந்தா அறிக்கை

மதுரை ஆதீன மடத்தின் அடுத்த மடாதிபதி யார்? - சர்ச்சை கிளப்பும் நித்யானந்தா அறிக்கை

மதுரை ஆதீனம் - நித்யானந்தா

மதுரை ஆதீனம் - நித்யானந்தா

மதுரை ஆதீன மடத்தின் தற்போதைய பீடாதிபதி அருணகிரிநாதர் சுவாச கோளாறு காரணமாக கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மதுரை ஆதீன மடத்தின் மடாதிபதி அருணகிரிநாதர் உடல்நல குறைவால் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தன்னை அடுத்த மடாதிபதியாக சித்தரித்து நித்யானந்தா வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் மிக தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீன மடத்தின் 292வது மடாதிபதியாக 1980 ஆம் ஆண்டு முதல் (அருணகிரி) ஶ்ரீலஶ்ரீ அருணகிரிநாத ஶ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார்.

அவர் கடந்த 2012 ஏப்ரல் 27 அன்று நித்தியானந்தாவை மதுரை ஆதீன மடத்தின் இளைய பீடாதிபதியாக அறிவித்தார். அப்போது கடும் சர்ச்சைகள் எழுந்ததை தொடர்ந்து, 2012 டிசம்பர் 19 அன்று அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றார். பின்னர், திருவாவடுதுறை ஆதீனத்தின் மூத்த தம்பிரான் சுந்தரமூர்த்தி சுவாமிகளை இளைய ஆதீனமாக நியமித்தார்.

நித்தியானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்து, பின் வாபஸ் பெறப்பட்ட உத்தரவுகள் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகளில் கடந்த 2018 மே மாதம் நித்தியானந்தா மடத்திற்குள் நுழைய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அப்போது, நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட மனுக்களில், தன்னை 293 வது பீடாதிபதியாக குறிப்பிட்டிருந்தார் நித்தியானந்தா. அந்த குறிப்புகள் நித்தியானந்தா முறைகேடாக தயாரித்தவை என ஆதீன மடம் நீதிமன்றத்தில் குறிப்பிட்டு இருந்தது. அந்த வழக்குகள் தற்போதும் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில், மதுரை ஆதீன மடத்தின் தற்போதைய பீடாதிபதி அருணகிரிநாதர் சுவாச கோளாறு காரணமாக கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராகாத நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்து வருகிறது.

இந்நிலையில், மதுரை ஆதீனம் விரைவில் நலம்பெற வேண்டி முகநூல் பக்கத்தில் நித்தியானந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னை மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதியாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "ஆதீன மடத்திற்கான எல்லா பொறுப்புகளும், உரிமைகளும், கடமைகளும், அதிகாரங்களும் மற்றும் ஆன்மீக ரீதியான, மத ரீதியான சடங்குகள் மற்றும் பூஜைகள் செய்வதற்கான பாரம்பரிய உரிமைகள் பெற்று உள்ளதாக" வும் தெரிவித்துள்ளார்.

Must Read : "தோனி பிரதமர், விஜய் முதல்வர்’ - மதுரை ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு

ஆதீன மடத்தின் சொத்துக்கள் பலவற்றை குத்தகைக்கு கொடுத்த விவகார வழக்குகளும் உயர்நீதிமன்ற கிளையில் நிலுவையில் உள்ள நிலையில், தன்னை ஆதீன மடத்தின் அடுத்த மடாதிபதியாக குறிப்பிட்டு நித்தியானந்தா வெளியிட்டுள்ள அறிக்கை மீண்டும் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக ஆதீன மடமோ அல்லது, அறநிலைய துறையோ உரிய விளக்கம் அளித்து மடாதிபதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

Published by:Suresh V
First published:

Tags: Madurai Adhinam, News On Instagram, Nithyananda