Home /News /tamil-nadu /

TN Assembly Election Result 2021 | விருத்தாசலம் டூ கோவை தெற்கு: விஜயகாந்த் பாணியில் கமல்ஹாசன்?

TN Assembly Election Result 2021 | விருத்தாசலம் டூ கோவை தெற்கு: விஜயகாந்த் பாணியில் கமல்ஹாசன்?

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

தனியாக களம் காணும் தன்னுடைய கொள்கையில் சமரசம் செய்து கொண்ட விஜயகாந்த்  2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தார்.

தமிழக அரசியலில் திமுக, அதிமுகவிற்கு மாற்றாக சமீபத்தில் வந்த கட்சிகளில் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பதிவு செய்தது என்றால் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக தான். கட்சி தொடங்கிய போது கடவுளுடனும், மக்களுடனும் மட்டும் தான் கூட்டணி என்று சொல்லிவிட்டு பின்னர் அவர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது தனிக்கதை..  இருப்பினும் தமிழக சட்டமன்றத்தில் தனி முத்திரை பதித்தவர் விஜயகாந்த்.

2005 செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் தடபுடலாக கட்சி தொடங்கிய விஜயகாந்த். அடுத்த ஆண்டு 2006ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தனித்து 234 தொகுதிகளிலும் களம் கண்டார், இருப்பினும் விருத்தாசலத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டும் தனி ஒருவராக வெற்றி பெற்று தமிழக சட்டமன்றத்திற்குள் கன்னி அரசியல்வாதியாக நுழைந்தார். இத்தேர்தலில் சுமார் 30 லட்சம் வாக்குகள், 10% அளவுக்கு வாக்கு சதவீதம் பெற்று தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்தார்.

தனியாக களம் காணும் தன்னுடைய கொள்கையில் சமரசம் செய்து கொண்ட விஜயகாந்த்  2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். 41 தொகுதிகளில் போட்டியிட்ட விஜயகாந்தின் தேமுதிக அதில் 29-ல் வெற்றி பெற்றது. அத்தேர்தலில் திமுக மிக மோசமான தோல்வியை பதிவு செய்ததால் எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெற்றார் விஜயகாந்த். இப்படி ஏறுமுகமாக இருந்த விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கை அந்த தேர்தலுக்கு பின்னர் சரிவையும் சந்தித்தது. அவருடைய கட்சி எம்.எல்.ஏக்கள் 8 பேர் ராஜினாமா செய்ததையடுத்து அவர் எதிர்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்தார்.

விஜயகாந்துக்கு அடுத்ததாக தமிழக அரசியலில் அதிகம் எதிர்பார்க்கப்படும் தலைவர்களாக உருவெடுத்துள்ளவர்கள் நாம் தமிழர் கட்சியின் சீமானும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன் மட்டுமே. சீமான் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் தனித்தே களம் கண்டு வந்தாலும் கூட வெற்றி பெறும் அளவிற்கு அவருக்கு வரவேற்று இன்னும் கிடைக்கவில்லை. பல இடங்களில் அவரது கட்சி 3வது இடத்தில் வந்துள்ளது.

2018ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன். முக்கிய கட்சிகளான திமுக, அதிமுகவுடன் கூட்டு சேராமல் உள்ளது.

2019 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டு 16 லட்சம் வாக்குகளை பெற்று திரும்பிப் பார்க்கச் செய்தது ம.நீ.ம. அக்கட்சியின் வாக்கு வங்கி 3.72% ஆக இருந்தது.

இந்த நிலையில் 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம், திமுக, அதிமுகவிற்கு மாற்றாக தனது தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கியது. அதில் சரத்குமாரின் ச.ம.க மற்றும் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி போன்ற கட்சிகளையும் கூட்டணியில் இணைத்துக்கொண்டது.

ம.நீ.ம தலைவர் கோவை தெற்கு தொகுதியில் களம் கண்டார். கோவை தெற்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் மயூர ஜெயக்குமார் ஆகியோர் களம் கண்டுள்ளனர். மும்முனை போட்டியில் கமல் ஹாசன் முந்தியுள்ளார்.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாக்கு எண்ணிக்கையில் 12 சுற்றுகளின் முடிவில் கமல்ஹாசன் முன்னிலை வகிக்கிறார்.

24,275 வாக்குகளுடன் கமல் முதலிடத்திலும், 22080 வாக்குகளுடன் வானதி சீனிவாசன் 2ம் இடத்திலும், 19956 வாக்குகளுடன் மயூரா ஜெயக்குமார் 3ம் இடத்திலும் உள்ளனர்.

கோவை தெற்கில் வெற்றி பெற்று தமிழக சட்டப்பேரைவைக்குள் நுழைந்து கமல்ஹாசன் புதிய சரித்திரம் படைப்பாரா என்பதே இந்தத் தேர்தலின் சுவாரஸ்ய கட்டமாக மாறியுள்ளது., மிகவும் கடினமான போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் வெற்றி, தோல்வியை கடந்து கமல்ஹாசன் ஏற்படுத்தியுள்ள போட்டி பிற கட்சிகளை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
Published by:Arun
First published:

Tags: Kamal Haasan, Makkal Needhi Maiam, TN Assembly Election 2021, Vijayakanth

அடுத்த செய்தி