Home /News /tamil-nadu /

2 ஆண்டுகளில் பாஜகவை வீழ்த்த முடியும்... காங்கிரஸ் செய்ய வேண்டியது என்ன? பட்டியலிட்ட தி.க. தலைவர்

2 ஆண்டுகளில் பாஜகவை வீழ்த்த முடியும்... காங்கிரஸ் செய்ய வேண்டியது என்ன? பட்டியலிட்ட தி.க. தலைவர்

கி.வீரமணி

கி.வீரமணி

அரசியலில் எதுவும் நிரந்தரமான நிலை இல்லை என்பதை எண்ணி, தோல்வி அடைந்தவர்கள், வெற்றி பெற்றவர்களும் தத்தம் நிலைப்பாட்டை ஆராய ஒரு வாய்ப்புதான் தேர்தல் என்பதை உணரவேண்டும்.

  இன்னும் 2 ஆண்டுகளில் பாஜகவை வீழ்த்த முடியும் என்று கூறியுள்ள திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி காங்கிரஸ் கட்சி செய்ய வேண்டியவை குறித்தும் பட்டியலிட்டுள்ளார்.

  5 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி சந்தித்தது. பஞ்சாப் நீங்கலாக உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. இதனை குறிப்பிட்டு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

  பஞ்சாபில் பா.ஜ.க. பெற்ற தோல்வி - எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி பெற்றுள்ள வெற்றியால், காங்கிரஸ் தன்னிடமிருந்த ஆட்சியை இழந்துள்ளது. பா.ஜ.க. - மோடி தலைமைக்கான செல்வாக்கு என்பது ஆம் ஆத்மி வெற்றியின்மூலம் பஞ்சாபில் பிரதிபலிக்க வில்லை என்றே கொள்ளப்படும்.

  மணிப்பூரில் அறுதிப் பெரும்பான்மைக் கிட்டாததால், ஒரு சுயேச்சையை இணைத்துதான் பா.ஜ.க. ஆட்சி அமைத்திடும் நிலை.

  காங்கிரஸ் செய்யவேண்டியது என்ன?

  உத்தராகண்ட்டில் பா.ஜ.க. வெற்றி பெற்றாலும், பா.ஜ.க. முதலமைச்சர் வேட்பாளர் தோல்வி அடைந் துள்ளார்!

  உ.பி.யில் காங்கிரசின் தோல்வி, செல்வி மாயாவதியின் பகுஜன் கட்சி தோல்வி - இரண்டும் அதிர்ச்சிக்குரிய தோல்விகளாகும்.

  பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியாக தேர்தலுக்கு முன்பே உட்கட்சி பிரச்சினையால் பலவீனப்பட்டது நாடறிந்த உண்மையாகும்.

  கோவாவில் அதற்கு இருந்த வாய்ப்பும் பறிபோனது.

  காங்கிரஸ் கட்சி தனது அடிக்கட்டுமானத்தையே மாற்றி புதுப்பிக்க வேண்டியது அதன் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது!

  காங்கிரசை பலவீனப்படுத்திட உள்ளும் புறமும் பல சக்திகள் வேலை செய்தன. பா.ஜ.க. பெற்ற வெற்றி தற்காலிகம்தான் என்று நிரூபிக்கவேண்டிய அளவுக்கு காங்கிரஸ் தலைமை சரியாக ஆய்வு செய்து, அதற்குக் கிடைத்துள்ள தொடர் தோல்விகளை “அதிர்ச்சி வைத்தியமாகவே” எடுத்து மீள திட்டமிடவேண்டும்!

  காங்கிரசிற்கு ஆதரவு பல மாநிலங்களில் இருந்தும், அதை சரியாகத் திரட்டும் பயிற்சி பெற்ற இயந்திரம் இல்லை; “தலைவர்களின்’’ தன்முனைப்பு கட்சியை பலவீனப்படுத்தி யுள்ளது என்பது எளிதில் எவருக்கும் புரியக்கூடிய ஒன்று.

  இதையும் படிங்க - ''சாதி - மத வன்ம பதிவுகளை பதிவிடுவோரை முளையிலேயே களையெடுக்க வேண்டும்'' : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

  எதிர்க்கட்சிகள் பெறவேண்டிய பாடம்!

  மதச்சார்பின்மை, சமூகநீதி, ஜனநாயகம், பாதுகாக் கப்படவேண்டிய அரசமைப்புச் சட்ட ரீதியான பல வாழ்வாதார உரிமைகள், மாநில உரிமைகள், பன்முக கலாச்சாரம் - இவற்றைப் பாதுகாக்கும் கண்ணோட்டத் தில், பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். வெற்றிகள் - நாட்டின் ஜனநாயகக் கட்டுக்கோப்புக்கும், அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கும் விடுக்கும் கேள்விக் குறிகளே என்பதை நன்கு புரிந்து, இந்தத் தோல்விகளிலிருந்து எதிர்க்கட்சிகள் பாடம் கற்றுத் தங்களது பார்வையை, அணுகுமுறையை மாற்றும் புதிய சிந்தனைக்குத் தயாராக வேண்டிய எச்சரிக்கை மணியே- பா.ஜ.க. பெற்ற இந்த வெற்றிகள்.

  இதையும் படிங்க - ராஜபக்சேவின் கூட்டாளி சுமந்திரனை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கக்கூடாது: வ.கௌதமன் வலியுறுத்தல்

  மோடி கூறுவது என்ன?

  பா.ஜ.க. பெற்ற வெற்றியைப் பற்றி பிரதமர் மோடி அவர்கள்,
  ‘‘இந்த வெற்றி, ஏழைகளுக்கு ஆதரவான அரசு பா.ஜ.க. என்பதற்கான ஓப்புதல் ஆகும். ஆக்கப்பூர்வ அரசுகள் பா.ஜ.க. அரசுகள் என்பதற்கான அங்கீகாரம்‘’ என்று கூறியுள்ளார்.

  ‘‘இந்த வெற்றி தேசியத்துக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த வெற்றி’’ என்கிறார் உத்தரப்பிரதேச முதல மைச்சர் யோகி ஆதித்யநாத்.
  பத்திரிகையாளர் சீமா சிஷ்டி எழுதுகிறார்
  நேற்று (11.3.2022) டில்லி பத்திரிகையாளர் சீமா சிஷ்டி என்பவர், ஆங்கில நாளேடு ‘இந்து’வில் எழுதியுள்ள ஒரு செய்திக் கட்டுரையில்,

  ‘‘உத்தரப்பிரதேசத்தில்தான் ஏழைகளான இளை ஞர்களின் வேலை கிட்டாதவர்கள் எண்ணிக்கை இந்தியாவிலேயே மிக அதிகமாக கடந்த 5 ஆண்டுகளில் 16 லட்சம் பேர்களாக உயர்ந்துள்ளது.

  மாநிலத்தில் ஜி.டி.பி. வளர்ச்சி, உணவு மற்ற பொருளாதார நிலையில், மற்ற மாநில அரசுகளுடன் ஒப்பிடுகையில், மிகவும் கீழே உள்ளது. விலைவாசி ஏற்றம் - இதனால் பாதிக்கப்பட்ட வர்கள் வெளி மாநிலங்களுக்கு வேலைக்குச் சென்று, கரோனா கொடுமை காரணமாக வேலை கிட்டாது திரும்பிய நிலையில், அவர்களுக்கு ஏற்பட்ட நிலைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஹிந்துத்துவா மத உணர்வையே பிரதானமாக்கினார்கள், வென்றுள்ளார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  ‘‘மயக்க பிஸ்கெட்டுகள் மாதிரி 80:20 என்ற வெறுப்புப் பிரச்சாரத்தின் வேகம் மற்றவைப் பற்றி பாதிக்கப்பட்ட மக்களை யோசிக்க விடவே இல்லையே’’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

  ‘‘ஹிந்துத்துவாவை எதிர்கொண்டு, மண்டல் மூலம் பதிலளிக்கும் தமிழ்நாட்டின் திராவிட மாடலுக்கும், உத்தரப்பிரதேசத்திற்கும் இடைவெளி பல மைல்கள்’’ என்றும் ஒப்பீடு செய்துள்ளார்!

  2 ஆண்டுகளில் சாதிக்கலாம்!

  இந்தத் தோல்வி முடிவுகளைப் பாடமாகக்கொண்டு எதிர்கட்சியினர் வலுவான கூட்டணி, சமூகநீதி, மாநில உரிமைகள், ஜனநாயகப் பாதுகாப்பு, அரசமைப்புச் சட்ட நெறிமுறைகள் காப்பு அடிப்படையில் ஓரணியை கட்டிட - தமிழ்நாடு திராவிட மாடல் ஆட்சி - அது எப்படி சமூகநீதியை உள்ளடக்கிய பொருளாதார, மாநில உரிமைகள், பன்முக கலாச்சாரப் பாதுகாப்பு என்பதை மய்யப்படுத்தினால், இன்னும் 2 ஆண்டுகாலத்தில் (2024 - மக்களவைத் தேர்தலில்) சாதித்துக் காட்ட முடியும்.

  வீழ்வது முக்கியமல்ல; விரைந்து எழுவதுதான் மிக முக்கியம்! எதிர்க்கட்சிகளின் வலுவான ஒற்றுமை அதிகம் தேவை!

  பாடம் கற்றிட வேண்டிய மாயாவதி கட்சி

  உத்தரப்பிரதேச தேர்தலில் போட்டியிட்ட கட்சிகளில் பாடங் கற்றுக்கொள்ள வேண்டிய பெருந்தோல்வி கண்ட காங்கிரசுக்கு அடுத்து, பாடங் கற்றிட வேண்டிய கட்சி மாயாவதி அவர்களின் பகுஜன் சமாஜ் கட்சியாகும். 403 இடங்களில் போட்டியிட்டு ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறார்; இதற்கு முக்கியக் காரணம் என்ன?

  அவருடையது என்று கருதி கணக்கிடப்பட்ட வாக்கு வங்கி ஏன் காணாமற்போனது? யாரிடத்தில் சென்றது? என்பதை அவரது கட்சியே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

  உத்தரப்பிரதேசத்தில் சமூக நீதிப் போராளியாக இருந்து படிப்படியாக கொள்கை ரீதியாக பகுஜன் சமாஜ் கட்சியை ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு அதை உயர்த்திட உழைத்த கன்ஷிராம் அவர்களது, பகுஜன் சமாஜ் கட்சியை - ‘சர்வஜன் கட்சி’ என்பதாக ஆகி பார்ப்பனர் ஆதரவைப் பெற அதன் அடிப்படையையே மாற்றியதோடு, அதை பார்ப்பன ‘மிஸ்ரா’க்களிடம் ஒப் படைத்தது - “தனது கட்சி வீழ்ச்சிக்குத் தானே காரணமாகிவிட்டது” பரிதாபத்திற்குரியது.

  சமூகநீதிக்கு பொது எதிரி - கொள்கைபூர்வமாக யார் என்ற பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்துபோய், “பரசுராமருக்குக் கோயில் கட்டி பெருமை சேர்ப்பேன்” என்று மாயாவதி அவர்கள் கூறியது, அம்பேத்கரின் கொள்கை, லட்சியத்திற்கு ஏற்றதா? நாகபுரி “தீட்சா பூமியில்” அவர் கூறிய 21 வாக்குறுதிகளுக்கு இது உடன்பாடு இல்லையே! தேர்தலின்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா மாயாவதியைப் பாராட்டியதன் பலன் இதுதான்!

  தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் வாக்கு வங்கி சிதைந்தது போலவே, ஒவைசி என்பவர் மூலமாக பல தொகுதி களில் பா.ஜ.க.வை வலுவாக எதிர் நின்று தோற்கடிக்க வேண்டிய நிலையை மேற்கொள்ளாது. பா.ஜ.க. வெற்றிக்கு மறைமுகமாக உதவியது என்பது புள்ளி விவர ரீதியான உண்மையாக வெளிப்படுகிறது.

  அண்மை உத்தரப்பிரதேசத் தேர்தலில் -ஓவைசியின் கட்சியினால்
  200 வாக்குகள் வித்தியாசத்தில் 7 தொகுதிகள்
  500 வாக்குகள் வித்தியாசத்தில் 23 தொகுதிகள்
  1000 வாக்குகள் வித்தியாசத்தில் 49 தொகுதிகள்
  2000 வாக்குகள் வித்தியாசத்தில் 86 தொகுதிகள்
  ஆக 165 தொகுதிகளில் பா.ஜ.க. அரியணை ஏற உதவியுள்ளார்.

  குஜராத்தில் முன்பு மோடி அவர்களுக்குத் தேர்தல் ஆலோசகராக இருந்த தேர்தல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர் “இந்த மாநிலத் தேர்தல் முடிவுகளை வைத்து, உளவியல் ரீதியிலான தீர்க்கமான ஆதாயத்தைப் பெற செய்யப்பட்ட புத்திசாலித்தனமான முயற்சி; இந்தப் போலியான கருத்துருவாக்கத்தை நம்பவோ, அதில் விழவோ வேண்டாம். இந்தியாவுக்கான யுத்தம் 2024இல் நடத்தப்பட்டு முடிவெடுக்கப்படும் - மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் மூலம் அல்ல” என்ற கூற்றை ஆழ்ந்து சிந்தித்து தெளிவடைய வேண்டியது முக்கியம்.

  அரசியலில் எதுவும் நடக்கலாம்

  அரசியலில் எதுவும் நிரந்தரமான நிலை இல்லை என்பதை எண்ணி, தோல்வி அடைந்தவர்கள், வெற்றி பெற்றவர்களும் தத்தம் நிலைப்பாட்டை ஆராய ஒரு வாய்ப்புதான் தேர்தல் என்பதை உணரவேண்டும். மக்களிடம் உண்மையான இறையாண்மை முடிவுகள் உள்ளன என்ற பாடம் முக்கியமானது.
  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
  Published by:Musthak
  First published:

  Tags: Congress, K.Veeramani

  அடுத்த செய்தி