முகப்பு /செய்தி /தமிழ்நாடு / முதற்கட்ட உள்ளாட்சித்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது!

முதற்கட்ட உள்ளாட்சித்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது!

  • Last Updated :

ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் முதல் கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால், அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பரப்புரையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளன. முதற்கட்ட தேர்தல் டிசம்பர் 27 அன்றும், இரண்டாம் கட்ட தேர்தல் 30 அன்று நடக்கின்றன.

இந்நிலையில், முதற்கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதற்காக மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஊராட்சி தலைவர், வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களும் தங்கள் சின்னங்களை அறிமுகம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் திமுக - காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், செயலாளர் சஞ்சய்தத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

நாடாளுமன்றத்தேர்தலை போல், உள்ளாட்சித்தேர்தலிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணியை தமிழக மக்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும் எனக்கூறி முகுல் வாஸ்னிக் வாக்கு சேகரித்தார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திமுக எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக வேட்பாளர்களை ஆதரித்து, துப்பாக்கி தொழிற்சாலை ரவுண்டானா பகுதியில் வாக்கு சேகரித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் புங்கம்பாடியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோவிந்தராசன், உள்ளாட்சித்தேர்தல் முடிவு வந்த மறுநாளே ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் எனக்கூறி வாக்குசேகரித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் சரண்யா ஆட்டோ சின்னத்தில் போட்டியிடுகிறார். இதையடுத்து பாட்ஷா படத்தில் வரும் ஆட்டோக்காரன் பாடலை ஒலிக்க செய்து வாக்கு சேகரித்தார்.

பெரம்பலூர் மாவட்டம் அம்மாபாளையத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பாப்பாத்தி அசோக்குமாரை ஆதரித்து, எம்ஜிஆர், விஜயகாந்த் வேடமிட்டவர்கள் வாக்கு சேகரித்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரையில் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அகமது முஸ்தபா, சீப்பு சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனால் சீப்பை கொண்டு வாக்காளர்களின் தலைமுடியை சீவி வித்யாசமான முறையில் வாக்கு சேகரித்து அனைவரையும் வியக்கவைத்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு மூக்குக் கண்ணாடி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வாக்காளர்களுக்கு மூக்குக் கண்ணாடி அணிவித்து வாக்கு கேட்டார். சிறியவர்கள் முதல் பெரியவர்களை அனைவருக்கும் இவர் கண்ணாடி மாட்டி விட்டது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.

Also see...

First published:

Tags: Local Body Election 2019