ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மதுரை தேர்தல் தேதி விவகாரத்தில் மீண்டும் சிக்கல்

மதுரை தேர்தல் தேதி விவகாரத்தில் மீண்டும் சிக்கல்

மதுரை சித்திரை திருவிழா

மதுரை சித்திரை திருவிழா

"தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்போது மதுரைக்கு மட்டும் மாற்ற முடியாது" என்று தேர்தல் ஆணைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

மதுரையில் சித்திரை திருவிழா அன்று மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால், அதனை மாற்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சித்திரை திருவிழா திட்டமிட்டபடி ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என கள்ளழகர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. குறிப்பாக தேர்தல் நாளான 18-ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் வாக்குப்பதிவு குறையும் என்றும், தேர்தல் ஏற்பாடுகளை மேற்கொள்வதில் இடையூறு ஏற்படும் என்றும் அஞ்சப்படுகிறது.

சித்திரைத்திருவிழா நாளில் தேர்தல் நடத்துவதை எதிர்த்து பாஸ்கர் சாரதி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான தேர்தல் ஆணைய வழக்கறிஞர், தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்போது, மதுரைக்கு மட்டும் வாக்குப்பதிவை மாற்ற முடியாது என்றும், இவ்விசயத்தை நிர்வாக ரீதியாக சரிசெய்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகள், மதுரை மக்களின் மனநிலை மற்றும் மதுரையின் உண்மை நிலையை அறிந்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். தமிழக அரசும், தலைமை தேர்தல் அதிகாரியும் இதுகுறித்து ஏன் முன்னதாக தகவல் அளிக்கவில்லை என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

மதுரை கள நிலவரத்தை அறிந்து இத்தொகுதிக்கு மட்டும் தேர்தல் தேதியை மாற்றியமைப்பது பற்றி உரிய முடிவெடுக்க வேண்டும். மேலும் அதன் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தேர்தலுக்காக திருவிழா நிகழ்ச்சிகளை மாற்ற முடியுமா என மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள திருவிழா அட்டவணையில் 18-ம் தேதிக்கான நிகழ்ச்சிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அன்றைய தினம் அதிகாலை 1.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் எதிர்சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் இந்நிகழ்ச்சிகளில் சுமார் 3 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தேர்தல் தேதி விவகாரத்தில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Also see... சித்திரைத் திருவிழா அன்று தேர்தல்...! மாற்று ஏற்பாடு குறித்து மதுரை ஆட்சியர் விளக்கம்

  2 ஆண்டுகளுக்கு முன்பே புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை: புகார் அளித்தவர் நியூஸ்18-க்கு பேட்டி

First published:

Tags: Elections 2019, Lok Sabha Election 2019, Lok Sabha Key Constituency