இஸ்லாமியர்களுக்கு எதிரானது குடியுரிமை சட்ட திருத்த மசோதா - ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

எம்.எச்.ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பாகிஸ்தான், வங்கதேசம், ஆஃப்கானிஸ்தானில் இருந்து 2014-ம் ஆண்டிற்கு முன்பாக இந்தியாவில் சட்டத்திற்கு புறம்பாக அல்லது விசா காலம் முடிந்தும் வசித்து வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள், ஜைனர்கள், பவுத்தர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

இதற்காக 1955-ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்த மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியரும் ஜவாஹிருல்லாவிடம் பேசியபோது...

பா.ஜ.க. அரசு கொண்டு வரவுள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதா அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதா?

அரசியலமைப்புச் சட்டத்தின் 15-ம் பிரிவு இந்திய குடிமக்களிடம் மதத்தின் பெயரால், பாலினத்தின் பெயரால், சாதியின் பெயரால் பாரபட்சம் காட்டக் கூடாது என சொல்கிறது. அரசியலமைப்பின் 14-ம் பிரிவு எந்த வகையான பாரபட்சமும் யாரிடமும் காட்டக்கூடாது எனவும் சொல்கிறது.

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆஃப்கானிஸ்தானின் நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக வந்த இஸ்லாமியர் அல்லாத பிற மதத்தினருக்கு குடியுரிமை வழங்க இந்த மசோதா வழிவகை செய்வது அரசியலமைப்புச் சட்டத்திற்கு நேர் எதிராக அமைந்துள்ளது. இந்தியாவிற்கு அண்டை நாடுகளில் மதத்தின் பெயரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத்தான் இந்த சட்டதிருத்தம் கொண்டு வரப்படுகிறது என அரசால் இந்த மசோதா நியாயப்படுத்தபடுகிறது. அப்படியெனில் ஏன் மியான்மரும், இலங்கையும் இந்த வரிசையில் விடுபட்டார்கள். மியான்மரில் முஸ்லீம்கள், இலங்கையில் தமிழர்கள் மீது பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.

அஸ்ஸாமில் நடந்த தேசிய குடிமக்கள் கணக்கெடுப்பிற்கும் இந்த சட்டத்திருத்த மசோதாவிற்கும் சம்பந்தம் உள்ளதா?

நிச்சயமாக உள்ளது. அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடந்தபோது மொத்தம் 19 லட்சம் பேர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றும். அதில் 12 லட்சம் பேர் இந்துக்கள் என்பது தெரிய வந்தது. அஸ்ஸாமில் சட்டவிரோதமாக இஸ்லாமியர்கள்தான் அதிகம் உள்ளார்கள் என்ற பா.ஜ.கவின் வாதத்தை இந்த கணக்கெடுப்பு பொய்யாக்கியது. அந்த 12 லட்சம் பேருக்கும் குடியுரிமை வழங்குவதற்கு ஏதுவாகவும் இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதன் மூலம் பா.ஜ.க.விற்கு கிடைக்கும் அரசியல் லாபம் என்ன?

பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தத்தை பின்பற்றுகிறது. இந்தியாவில் இந்து அல்லாத பிற மதத்தினர் இரண்டாம், மூன்றாம் குடிமக்களாகத்தான் வாழ வேண்டும் என்பதே கோல்வாக்கரின் கொள்கை. அந்த கொள்கையை பின்பற்றும் பா.ஜ.க. தான் ஆட்சியில் இல்லாதபோது சிறுபான்மையினர் மீது கலவரங்களை தொடுத்தது. தற்போது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் சிறுபான்மையின மக்களை ஒடுக்குவதற்கான ஒரு செயல் திட்டம்தான் இந்த மசோதா.

உத்தரபிரதேசம், தலைநகர் டெல்லி போன்ற பகுதிகளில் எத்தனையோ இஸ்லாமியர்கள் சாலைகளில் வசிக்கின்றனர். அவர்களால் எந்த ஆவணத்தைக் காட்ட முடியும். அவர்களை ஒடுக்கும் நோக்கிலே இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

ராஜ்யசபாவில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மையை பெற அதிமுக உள்ளிட்ட கூட்டணி மற்றும் ஆதரவுக் கட்சி எம்.பிக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதிமுக என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்?

முத்தலாக் தடை சட்டத்தை அதிமுக கடுமையாக எதிர்த்தது. அந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது என மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்கள். ஆனால், மக்களவையில் மசோதா நிறைவேற்றும்போது அதிமுக எம்.பி. ரவீந்தரநாத் ஆதரவாக வாக்களித்தார். மற்ற எம்.பிக்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. இந்த நடவடிக்கை வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அவர்களுக்கு பின்னடைவாக எதிரொலித்தது. சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக செயல்படும் ஜெயலலிதாவின் அரசு, அம்மாவின் அரசு என்று சொல்லிவரும் அதிமுக அரசு இந்த மசோதாவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவும் ஒருவேளை தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு செயல்படுத்தப்படும் பட்சத்தில் தமிழக சூழலில் என்ன பாதிப்பு ஏற்படும்?

இந்த சட்டத்தால் ஏதோ வடமாநிலத்தவருக்கு மட்டும்தான், இஸ்லாமியருக்கு மட்டும்தான் பிரச்னை என்று தமிழகத்தில் இருப்போர் நினைக்கக் கூடாது. இலங்கையில் நடந்த போரால் பாதிக்கப்பட்டு இங்கு வந்த தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியர்கள் கூட இந்த சட்ட திருத்தத்தால் பாதிக்கப்படுவார்கள். தமிழ்நாடு நீட் உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்ததுபோல் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவையும் எதிர்க்க வேண்டும்.

தொடர்ச்சியாக இந்திய அளவில் மிகவும் பிரச்னைக்குரிய சட்டங்களை பா.ஜ.க. கொண்டு வருவதன் நோக்கம் என்ன?

இந்தியா வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார சரிவை சந்தித்து வருகிறது. நமது பொருளாதார தளங்கள் அனைத்தும் சிறிய நாடான பங்களாதேசுடன் ஒப்பிடும் அளவு குறைந்துவிட்டது. இதுபோன்ற உண்மையான பிரச்னைகளில் இருந்து பொதுமக்களை திசைதிருப்பவே பா.ஜ.க. அரசு காஷ்மீரை துண்டாடியது, முத்தலாக் சட்டம், சட்டவிரோத நடவடுக்கைகள் தடுப்பு சட்டம் தற்போது குடியுரிமை சட்டம் உள்ளிட்ட சட்டத்திருத்தங்களை கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள் அமைப்புகள் இந்த சட்டத் திருத்தத்தை எதிர்க்க வேண்டும்.

Also See...
Published by:Sankar
First published: