#LokSabhaElections2019: தமிழகத்தில் 18 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல்! முழுவிவரம்
#LokSabhaElections2019: தமிழகத்தில் 18 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல்! முழுவிவரம்
தேர்தல் ஆணையம்
Lok Sabha Elections 2019 (மக்களவைத் தேர்தல்): நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு அந்த மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் தேதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.
தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யப்பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது வெளிவரும் என்று நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவிவந்தது. இந்தநிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் செய்தியாளர்கள் முன்னிலையில் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும். தமிழகத்துக்கு ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற இடைத்தேர்தல்கள் குறித்து தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம் நியூஸ் 18 தமிழ் செய்தியாளர் சுசித்ரா கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுனில் அரோரா, நாடு முழுவதும் உள்ள மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு அந்த மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் தேதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.
தமிழகத்தில் மொத்தம் 21 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. எனவே, 21 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ, ‘காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும்.
அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாது. இந்த மூன்று தொகுதிகள் தொடர்பாகவும் நீதிமன்றங்களில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அந்தத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறாது. ஒட்டப்பிடாரம் தொகுதியில் கிருஷ்ணாமி வழக்குத் தொடர்ந்துள்ளார். அரவக்குறிச்சி தொகுதியில் ஏ.பி.கீதா என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். திருப்பரங்குன்றம் தொகுதியில் சரவணன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை’ என்று தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநர் புகார் கடிதம் அளித்ததன் அடிப்படையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் உயிரிழந்ததால், இரு தொகுதிகள் காலி தொகுதிகளாக அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
1998-ம் ஆண்டு தமிழக-கர்நாடகா மாநில எல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக அ.தி.மு.க அரசில் அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டி மீது சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குநடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த வழக்கில் சமீபத்தில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிகப்பட்டது. அதனால், அவருடைய எம்.எல்.ஏ பதவி பறிபோனது. தமிழகத்தில் மொத்தம் 21 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. இந்தியா முழுவதும் 34 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.