புதுவையில் மும்முனைப்போட்டி: வேட்பாளர்கள் திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல்

 • Share this:
  இடைத்தேர்தலில் புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ஜான் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 3 தொகுதிகளுக்கும் அதிமுக, திமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்கின்றனர்.

  அடுத்த மாதம் 21-ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தலையொட்டி, அதிமுக கூட்டணியில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் அதிமுக-வும், காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக-வும், நாங்குநேரி, காமராஜ் நகர் தொகுதிகளில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன. இந்தத் தேர்தலை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மய்யம் ஆகியவை புறக்கணித்துள்ள நிலையில், மூன்று தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

  விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச் செல்வனும், திமுக சார்பில் புகழேந்தியும் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளராக சமூக செயல்பாட்டாளர் கந்தசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

  நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரனை காங்கிரஸ் தலைமை வெள்ளிக்கிழமை அறிவித்தது. நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சா.ராஜநாராயணன் களமிறங்குகிறார்.

  காமராஜர் நகர் தொகுதியை என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ ஜான் குமாரை கட்சித் தலைமை இன்று அறிவித்துள்ளது. மேலும், நாம் தமிழர் கட்சி சார்பில் பிரவீனா மதியழகன் போட்டியிடுகிறார்.

  இதில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், வேட்புமனுத் தாக்கலுக்கு நாளை மறுதினம் கடைசி நாளாகும். எனவே, கடைசி நாளில் அதிமுக, திமுக, காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.

  இதனிடையே, காமராஜர் தொகுதியை தங்களை ஆலோசிக்காமல், என்.ஆர்.காங்கிரஸுக்கு அதிமுக ஒதுக்கியதாக பாஜக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதையடுத்து, பாஜக-வை சமாதானப்படுத்தும் முயற்சியில் அதிமுக-வும் என்.ஆர்.காங்கிரஸும் ஈடுபட்டன.

  இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்படாத நிலையில், முன்னாள் எம்எல்ஏ நேரு, வாக்கு சேகரிக்கும் பணியை இன்று தொடங்கினார். இதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. நேரு மீது என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், கட்சித் தலைமையிடம் புகார் அளிப்போம் என்று அதிமுக கொறடா மணிகண்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால், குழப்பம் நீடித்துவருகிறது.

  Exclusive :  108 ஆம்புலன்ஸ் சேவையை முறைகேடாக பயன்படுத்தும் தனியார் மருத்துவமனைகள்

  Published by:Vijay R
  First published: