பொள்ளாச்சியில் துணிக்கடை அதிபரை உல்லாசத்திற்கு அழைத்து பணம், நகை கொள்ளையடித்த நடன அழகி உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாரை காதல்வலையில் வீழ்த்தி, நண்பர்களுடன் சேர்ந்து ஜோதிகா மிரட்டி பணம் பிடுங்குவதுபோல் ஒரு சம்பவம் கோவையில் நடைபெற்றிருக்கிறது. துணிக்கடை அதிபரை உல்லாசத்திற்கு அழைத்து ஒரு கும்பல் கைவரிசை காட்டியுள்ளது.
கோவை ராஜ வீதியைச் சேர்ந்தவர் வினோத்குமார். அதே பகுதியில் துணிக் கடை வைத்து நடத்தி வருகிறார். அவருக்கு திருப்பூரைச் சேர்ந்த நடன அழகி சுதா என்பவர் போன் மூலம் கடந்த ஆண்டு அறிமுகமாகியுள்ளார்.
வினோத்குமாருடன் தொடர்ந்து போனில் பேசி வந்த சுதா, ஒரு கட்டத்தில் அவருக்கு உல்லாச அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த நடன அழகியின் பேச்சில் மயங்கிய வினோத்குமாரும், அவரது அழைப்புக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை சிறப்பாக வரவேற்கலாம் எனக்கூறி டிசம்பர் 31ஆம் தேதி ஆனைமலைக்கு செல்லலாம் எனக்கூறியுள்ளார்.
இதை அடுத்து டிசம்பர் 31ஆம் தேதி வினோத் குமார் தனது சொகுசு காரில் சுதாவை அழைத்துக்கொண்டு பொள்ளாச்சி ஆனைமலை அருகே உள்ள பூவளப்பருதி என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள ஆறுமுகம் என்பவரது தோட்டத்துக்கு சென்று இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.
அப்போது திடீரென 5 பேர் கொண்ட கும்பல் தோட்டத்து வீட்டிற்குள் புகுந்துள்ளது. தொழிலதிபர் வினோத்குமாரை தாக்கி அவரிடமிருந்த 5 சவரன் நகை, ஏடிஎம் கார்டு மற்றும் அவரது சொகுசு காரை அந்த கும்பல் பறித்துள்ளது.
மேலும், தொழிலதிபரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி 27 ஆயிரம் ரூபாய் பணத்தையும் எடுத்துள்ளனர். பின்னர் வினோத்குமாரையும், சுதாவையும் அவரது காரிலேயே கடத்திக் கொண்டு அந்த கும்பல் கேரளா சென்று விட்டது.
புத்தாண்டு அன்று பொள்ளாச்சி அம்பராம்பாளையத்தில் வினோத் குமாரை மட்டும் அந்த கும்பல் இறக்கி விட்டுள்ளது.
சுதாவையும் இறக்கிவிடுமாறு கூறியபோதுதான், வினோத்குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சுதாவும், கடத்தல் நபர்களும் ஒரே கும்பல்தான் என்றும், தன்னை ஏமாற்றி பணம் பிடுங்குவதற்காக உல்லாச அழைப்பு விடுத்து சிக்க வைத்து பொள்ளாச்சிக்கு அழைத்துச் சென்றதும் தெரியவந்தது.
பணம், நகை போனால் பரவாயில்லை காரையாவது திரும்பத் தருமாறு, நடன அழகி சுதாவிடம் வினோத்குமார் கேட்டுள்ளார். காரைத் தர மறுத்த சுதா தன்னுடைய நண்பர்கள் மூலம், 25 லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இல்லையென்றால் தன்னுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்றும் அவர் மிரட்டியதாக தெரிகிறது.
இதையடுத்து பயந்துபோன வினோத்குமார் பொள்ளாச்சி அடுத்த ஆழியார் காவல் நிலையத்தில் 20 நாட்களுக்குப்பிறகு கடந்த வியாழக்கிழமை புகார் கொடுத்தார்.
போலீசார் அறிவுரைப்படி பணத்தைத் தருவதாக நம்ப வைத்து அந்த கும்பலை தமிழக கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் பகுதிக்கு வினோத் குமார் வரவழைத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்த ஆனைமலை போலீசார் கடத்தல் கும்பலின் தலைவரான கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவரது கூட்டாளிகளான கேரளாவைச் சேர்ந்த சதீஷ், கமல், அஜய் ஆகியோரை மடக்கிப் பிடித்தனர்.
மேலும் அவர்களுடன் இருந்த திருப்பூரைச் சேர்ந்த நடன அழகி சுதாவையும் போலீசார் கைது செய்தனர் .
அவர்களிடம் நடத்திய விசாரணையில், பெங்களூரு நட்சத்திர விடுதியில் நடனமாடும் நடன அழகி சுதாவை வைத்து செந்தில்குமார் இந்த மோசடியை அறங்கேற்றி வந்துள்ளார். அதன்படி வசதிபடைத்தவர்களை குறிவைத்து, அவர்களின் செல்போன் எண்ணை எடுத்து சுதா மூலம் பாலியல் வலை வீசுவார்கள்.
அதில் சிக்குபவர்களை அழைத்துச் சென்று, தங்களுக்கு தெரிந்த ரிசார்ட், வீடுகளில் உல்லாசமாக இருக்க ஏற்பாடு செய்வார்கள். அப்போது, அங்கு புகுந்து மிரட்டி பணம், நகையை கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரையும் கைது செய்த ஆழியார் போலீசார் பொள்ளாச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பிரசாந்தை போலீசார் தேடிவருகின்றனர்.
தமிழகம், கேரளா, கர்நாடகாவில் வசதிபடைத்த பலரிடம் இந்த கும்பல் கைவரிசை காட்டியிருக்க வாய்ப்புள்ளதாகவும், கைதானவர்களை காவலில் எடுத்து விசாரித்தால், இன்னும் எத்தனை பேரை இந்த கும்பல் ஏமாற்றியது என்பது வெளிச்சத்திற்கு வரும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
சமூக வலைதளங்களில் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், டிக்டாக், யூடியூப், ஹலோ, ஷேர்சாட், ஜியோ நியூஸ் ஆகியவற்றில் பின் தொடர்ந்து செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.