கத்தி முனையில் தொழிலதிபர் கடத்தல்: துப்பாக்கிச்சூடு நடத்தி மீட்ட போலீசார்

கடத்தல்காரர்களை போலீசாருடன் தேடும் பொது மக்கள்

சினிமாவை விஞ்சும் இந்த கடத்தல் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களைப் பார்த்த பொதுமக்கள் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் திகைத்துப் போய் நின்றுள்ளனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, தொழிலதிபரை கடத்திய 4 பேர் கொண்ட கும்பலிடமிருந்து, துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் அவரை பத்திரமாக மீட்டனர்.

  ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஆப்பக்கூடலைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சக்திவேல். கார் விற்பனை உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளார். நேற்று காலை 6 மணிக்கு வீட்டருகே நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் சக்திவேல். அப்போது இன்னோவா காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கத்தி முனையில் காருக்குள் தூக்கிப் போட்டுக் கடத்திச் சென்றது.

  காலையில் வெளியே சென்றவர் வீடு திரும்பாததால் கவலை அடைந்த குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சக்திவேல் கிடைக்காததால் பவானி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

  இதற்கிடையே, நேற்று மாலை 4 மணிக்கு சக்திவேல் செல்போனில் இருந்து அவரது குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டது மர்ம கும்பல். சக்திவேலை விடுவிக்க வேண்டும் என்றால் 5 லட்சம் ரூபாய் தர வேண்டும் என மிரட்டியுள்ளது. போலீசாரின் அறிவுரைப்படி கடத்தல் கும்பலிடம் பணம் தர சக்திவேல் குடும்பத்தினர் சம்மதித்தனர்.

  சேலம் மாவட்ட எல்லை அருகே உள்ள தனியார் மருத்துவமனை வாசலுக்கு பணத்துடன் வரும்படி மர்ம கும்பல் கட்டளையிட்டது. பவானி போலீசார், சேலம் அயோத்தியாபட்டணம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். காவல்ஆய்வாளர் குமார் தலைமையில் போலீசார் சாதாரண உடையில் காரில் அந்தப் பகுதியில் அமர்ந்திருந்தனர்.

  சரியாக மாலை 6 மணிக்கு இன்னோவா காரில் 4 பேர் கும்பல் குறிப்பிட்ட இடத்திற்கு வந்தது. போலீசார் பணம் கொடுக்க முயன்றபோது சுதாரித்துக் கொண்ட 4 பேரும் போலீசாரைத் தள்ளி விட்டு காரில் தப்பினர்.

  காவல் ஆய்வாளர் குமார், சக காவலருடன் காரில் அந்தக் கும்பலைத் துரத்தினார். சேலம் மாவட்டம் அரியானூர் வழியாக ஆட்டையாம்பட்டியை கடந்து நாமக்கல் மாவட்டம் அலவாய்ப்பட்டியில் அதிவேகமாக நுழைந்த கடத்தல் கும்பலின் கார் மண்ணில் சிக்கியது.

  காவல் ஆய்வாளர் குமார் துப்பாக்கி முனையில் அவர்களை சரணடையும்படி உத்தரவிட்டார். ஆனால் கடத்தல்காரர்கள் நான்கு பேரும் வீச்சரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் அவரைச் சுற்றி வளைத்தனர். அதில் இரண்டு பேர் போலீசார் வந்த காரை எடுத்துக் கொண்டு தப்பிக்க முயன்றனர்.

  அதனால் வேறு வழியின்றி குமார் துப்பாக்கியால் காரின் கண்ணாடியை நோக்கி சுட்டுள்ளார். பதிலுக்கு அவர்கள் அரிவாளால் குமாரைத் தாக்க முயன்றனர். தொடர்ந்து அருகே உள்ள ஏரிப் பகுதியில் நுழைந்து தப்பியோடினர்.

  இதற்கிடையே மற்ற இருவர் காவல் ஆய்வாளர் குமாரை தாக்கி தள்ளி விட்டுவிட்டு இன்னோவா காரை எடுத்துக் கொண்டு தப்பி விட்டனர். சம்பவத்தைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருடன் சேர்ந்து, ஏரிப் பகுதியில் நேற்று இரவு முழுவதும் மர்ம நபர்களைத் தேடினர்.

  கோவை மண்டல ஐஜி பெரியய்யா, நாமக்கல் மாவட்ட எஸ்பி அருளரசு, கோவை சரகம் டிஐஜி கார்த்திகேயன், சேலம் மாவட்ட துணை ஆணையர் தங்கதுரை ஆகியோர் ஏரியில் குற்றவாளிகள் பதுங்கியுள்ளனரா என ஆய்வு செய்தனர்.

  நாமக்கல் மாவட்ட அதிரடிப்படை போலீசாரும் ஏரியில் பதுங்கிய குற்றவாளிகளைத் தேடினர். இதற்கிடையே மர்ம கும்பல், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே தொழிலதிபர் சக்திவேலை காரில் இருந்து தள்ளி விட்டு தப்பியோடியது.

  அவரை பவானி போலீசார் மீட்டு அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். சினிமாவை விஞ்சும் இந்த சம்பவங்களைப் பார்த்த பொதுமக்கள் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் திகைத்துப் போய் நின்றனர்.

  இந்தக் கடத்தல் சம்பவத்தில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாகவும் முழு விசாரணைக்குப் பின் பின்னணி வெளியில் வரும் எனவும் நாமக்கல் மாவட்ட எஸ்பி அருளரசு தெரிவித்துள்ளார்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: