புதுக்கோட்டையில் தொழிலதிபர் கடத்தப்பட்டு கொலை: உறவினர்கள் சிக்கியது எப்படி?

புதுக்கோட்டையில் கடந்த மாதம் கடத்தப்பட்ட தொழிலதிபர் தவமணி, கொலை செய்யப்பட்டு காவிரி ஆற்றில் வீசப்பட்டுள்ளார். தொழிலதிபர் கொலை ஏன்?

புதுக்கோட்டையில் தொழிலதிபர் கடத்தப்பட்டு கொலை: உறவினர்கள் சிக்கியது எப்படி?
தவமணி
  • Share this:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள வெள்ளாளவிடுதி கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் 50 வயதான தவமணி. இவர் சென்னையில் உள்ள பிரபல ஜவுளி கடைகள் மற்றும் நகைக் கடைகளுக்கு தச்சு தொழில் ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தார்.

சென்னையிலும், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியிலும் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்திற்கு சொந்தக்காரர். இந்நிலையில் அதே கிராமத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு கடந்த மாதம் 18ஆம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது தவமணியை சில மர்ம நபர்கள் கண்ணில் மிளகாய் பொடியை தூவி காரில் கடத்திச் சென்றனர்.

தவமணியை மீட்டுத் தரக்கோரி அவரது குடும்பத்தினர் கடந்த மாதம் 19ஆம் தேதி கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 தனிப்படைகள் அமைத்து தவமணியை தேடி வந்தனர்.தனிப்படை போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் தவமணியை கடத்தியது அதே ஊரைச் சேர்ந்த அவரது நெருங்கிய உறவினர்கள் என்பது தெரியவந்தது.


இதனையடுத்து வெள்ளாளவிடுதி கிராமத்தைச் சேர்ந்த தவமணியின் உறவுக்கார இளைஞர்கள் 3 பேரை போலீசார் புதன்கிழமை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தவமணியை கடத்தியதை ஒப்புக்கொண்ட அவர்கள், கடத்திய 18ஆம் தேதி இரவே தஞ்சை மாவட்டம் தோகூர் கொண்டு சென்று கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் அவரது சடலத்தை கல்லணை கால்வாயில் வீசி விட்டு, அவரது சிம் கார்டை எடுத்துக்கொண்டு செல்போனையும் அதே கால்வாயில் வீசியதாக தெரிவித்தனர்.

கொலையை மறைக்க அவரது சிம் கார்டு எண்ணில் இருந்து அவரது குடும்பத்தினரிடம் இரண்டு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டி கடத்தல் நாடகம் ஆடியதாகவும் பிடிபட்டவர்கள் போலீசாரிடம் கூறினர். இதனையடுத்து 3 பேரை கைது செய்த போலீசார், தோகூர் பகுதியில் உள்ள கல்லணை கால்வாய்க்கு அழைத்துச் சென்று உடலைத் தேடினர். அப்போது சம்பவத்தன்று தவமணி பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் அவரது சிம்கார்டு அகற்றப்பட்ட செல்போன் ஆகியவை போலீசாரால் கைப்பற்றப்பட்டது.

தவமணியின் சடலம் கிடைக்காததால் அதை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தவமணியை கடத்திக் கொலை செய்தது அவரது உடன் பங்காளியான நெருங்கிய உறவினர்கள் என்பதால் அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தனர்.முதற்கட்ட விசாரணையில் தவமணி குறுகிய காலத்தில் அதிக வளர்ச்சி பெற்று கோடீஸ்வரர் ஆக உருவெடுத்துள்ளார். பகட்டாக ஊருக்குள் அவர் நடமாடி வந்தது, பங்காளிகள் சிலருக்கு பிடிக்கவில்லை. தவமணியின் அசுர வளர்ச்சியால் தங்களின் கவுரவம் பாதிக்கப்படுவதாக அவர்கள் நினைத்துள்ளனர்.

இதனால் உறவினர்களே திட்டமிட்டு தவமணியை கொலை செய்ய முடிவெடுத்து கடத்தி கொலை செய்தது தெரிய வந்தது.

மேலும் படிக்க...

வெட்டுக்கிளிகளை அழிக்கும் பணியில் ஹெலிகாப்டர்கள்

மேலும் இந்த கொலையில் கைதான 3 இளைஞர்கள் தவிர மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனால் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் சிலரை கைது செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
First published: July 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading