தமிழகம் முழுவதும் நாளை இரவு 11.45 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை செயலர்!

மாதிரிப் படம்

தென்மாவட்டங்களுக்கு மட்டும் SETC மூலம் 380 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து போக்குவரத்தில் பயணிகள் பயணிப்பது குறித்த கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை.

 • Share this:
  தமிழகம் முழுவதும் நாளை இரவு 11.45 மணி வரை அரசுப்பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து பேருந்துகளில் பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை செயலாளர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.

  கொரோனா தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழகத்தில் திங்கள் கிழமை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில் சிறப்பு பேருந்துகளை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்கள் இயக்கி வருகிறது. பேருந்துகள் இயக்கம் குறித்தும், பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., இன்று (22.5.2021) இரவு 8 மணி அளவில் ஆய்வு மேற்கொண்டார்.

  பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களில் இருந்து 4,500 பேருந்துகள் இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணி வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

  போக்குவரத்துறை அமைச்சர் அவர்கள் மதுரையில் இருந்து பிற ஊர்களுக்கு இயக்கப்படுகின்ற பேருந்துகள் இயக்கத்தினை தற்போது பார்வையிட்டு, ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும், கூடுதலாக 400 பேருந்துகள் தயாராக உள்ளன. இதற்கு மேலும் கூடுதலாக பயணிகள் வருகை தந்தால் அவர்கள் பயணிக்க ஏதுவாக மாநகர பேருந்துகளை பயன்படுத்தி விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி வரை இயக்க திட்டமிட்டுள்ளோம்.

  கோயம்பேட்டில் மட்டும் இன்று முதல் 1500க்கும் அதிகமான பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. தென்மாவட்டங்களுக்கு மட்டும் SETC மூலம் 380 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்து போக்குவரத்தில் பயணிகள் பயணிப்பது குறித்த கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படவில்லை. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து தொடர்ந்து பயணிக்கலாம்.

  கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியில் இருப்பர். கூட்டத்தினைப் பொறுத்து பயணிகளின் வசதிக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். பேருந்து நிலையத்தில் தொடர்ந்து இயக்கப்படும் பேருந்துகளை கண்காணிக்க 24 மணி நேரமும் எங்களது அலுவலர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: