மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஏனைய மாவட்டங்களின் அனேக இடங்களிலும், சென்னை மற்றும் புறநகரின் ஒருசில இடங்களிலும், இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு - மாலத்தீவு , கேரள கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் பல பகுதிகளில் தொடரும் கனமழையால், ஏராளமான நீர்நிலைகள் நிரம்பி, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.