பல்கேரிய ஏ.டி.எம் கொள்ளையர்கள் சென்னையில் சிக்கியது எப்படி? சுவாரஸ்ய தகவல்கள்

பல்கேரிய ஏ.டி.எம். கொள்ளையர்கள்

பல்கேரியாவில் இருந்து இதுபோன்ற மோசடியில் ஈடுபட வரும் அனைவருமே செம்மஞ்சேரி கண்ணகி நகர் பகுதியை தேர்ந்தெடுத்து தங்கியிருந்து மோசடி செய்துள்ளனர். அங்கு அவர்களுக்கு யாரேனும் உதவி இருக்கக்கூடும் என்கிற அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
வெளிநாட்டில் உள்ள வங்கி கணக்கு தகவல்களைத் திருடி,  இந்தியாவிற்கு வந்து போலி ஏ.டி.எம் கார்டுகள் தயாரித்து சுமார் 15 லட்சம் ரூபாய் வரை கொள்ளையடித்த பல்கேரிய ஏ.டி.எம் கொள்ளையர்கள் தமிழக காவல்துறையில் சிக்கியுள்ளனர்.

பல்கேரியாவைச் சேர்ந்த வெளிக்கோவ், மார்க்கோவ் ஆகிய இருவரும் கடந்த மே மாதம் செம்மஞ்சேரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவரும் வெளிநாட்டில் உள்ள வங்கிக் கணக்கு தகவல்களைத் திருடி, இந்தியாவிற்கு வந்து போலி ஏ.டி.எம் கார்டுகள் தயாரித்து சுமார் ₹ 15 லட்சம் வரை கொள்ளையடித்தனர்.

இவர்களிடம் இருந்து போலி ஏ.டி.எம் கார்டுகள், லேப்டாப், ஸ்கிம்மர் கருவி, என்கோடர், டிகோடர் கருவிகளும் இந்திய, வெளிநாட்டு பணங்களும் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் நேற்று 3 பல்கேரியர்கள் இதே போல செயல்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சிக்கியது எப்படி என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

பல்கேரியாவைச் சேர்ந்த நெக்கொலேய், போரீஸ், லியுபேமிர் ஆகியோர் துரைப்பக்கம் அருகே ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்து போலி ஏ.டி.எம் .கார்டுகள் தயாரித்து பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.

பின்னர் கொள்ளையடித்த சுமார் ₹ 18 லட்சம் இந்திய பணத்தை ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி விடுதியில் இவர்களுக்கென்று வழங்கப்பட்ட லாக்கரில் வைத்துள்ளனர்.இந்நிலையில் லாக்கர் நம்பரை மறந்துவிட்ட 3  பேரும் விடுதி மேலாலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர், விடுதி மேலாளர் சர்வீஸ் என்ஜினீரை அனுப்பி லாக்கரைத் திறக்க உதவியுள்ளார்.

அப்போது லாக்கரில் பணம் கவரில் சுற்றி வைக்கப்பட்டிருந்ததை பார்த்த சர்வீஸ் என்ஜினீர் சந்தேகம் அடைந்துள்ளார். மேலும் விடுதி மேலாளர் மூலமாக கண்ணகி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து காவல் ஆய்வாளர் வீரக்குமார் தலைமையில் காவலர்கள் விடுதியில் ரகசிய சோதனையில் ஈடுபட்ட போது பல்கேரியர்கள் தங்கியிருந்த அறையில் உள்ள கழிவறையில் ஒரு இடத்தில் ஸ்கிம்மர் கருவி, லேப்டாப், போலி ஏடிஎம் கார்டுகள், என்கோடர், டீ கோடர், புளூடூத் கருவிகள் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

பின்னர் அவற்றை அப்படியே இருந்தது போலவே வைத்துவிட்டு வந்துவிட்டனர். பின்னர் பல்கேரியர்கள் அறைக்கு வந்ததும் அவர்களை கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர். தங்களுக்கு எதுவுமே தெரியாது என்று கூறிய பல்கேரியர்கள் முன்னிலையிலேயே காவலர்கள் கருவிகளை எடுத்து வரவே, உண்மையை ஒத்துக்கொண்டனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் மத்திய குற்றப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு  பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை விசாரணை காவலில் எடுக்க மத்திய குற்றபிரிவினர் முடிவெடுத்துள்ளனர். மேலும் இவர்களது கூட்டாளிகள் யாரேனும் இந்தியாவில் பதுங்கி உள்ளார்களா என்கிற கோணத்திலும் விசாரணை நடைபெற உள்ளது.

இவர்களுக்கு வெளிநாட்டு பணத்தை மாற்ற உதவி செய்த கே.கே நகர் பகுதியைச் சேர்ந்த முத்து மாரி மற்றும் ஆகாஷ் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடிவருகிறார்கள்.மேலும் கைது செய்யப்பட்ட 3 பல்கேரியர்கள் குறித்த தகவல்களை பல்கேரிய தூதரகத்திற்கும் அனுப்பியுள்ளனர். பல்கேரியாவில் இருந்து இதுபோன்ற மோசடியில் ஈடுபட வரும் அனைவருமே செம்மஞ்சேரி, கண்ணகி நகர் பகுதியை தேர்ந்தெடுத்து தங்கியிருந்து மோசடி செய்துள்ளனர். அங்கு அவர்களுக்கு யாரேனும் உதவி இருக்கக்கூடும் என்கிற அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Also Watch: வேண்டாம் என்று பெயரிடப்பட்ட பெண்ணின் சாதனை 

Published by:Anand Kumar
First published: