Home /News /tamil-nadu /

Budget 2021: பட்ஜெட்டில் திருக்குறளை மேற்கோள் காட்டிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Budget 2021: பட்ஜெட்டில் திருக்குறளை மேற்கோள் காட்டிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு’ என்ற குறளை அடிப்படையாகக் கொண்டு வரி விதிப்பில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா முறையிலான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து, பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார். இதில் ‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும்’ என்ற திருக்குறளை உவமையாக அவர் மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார்.

தமிழகத்தின் மதுரையை பூர்வீகமாக கொண்டவர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தமிழ் மீதான பற்றால் ஒவ்வொரு முறையும் தனது பட்ஜெட் உரையில் தமிழ் சங்க இலக்கிய நூல்களிலிருந்து உவமைகளை காட்டி இவர் பேசி வருகிறார்.

கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு இடையே பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் இருக்க வேண்டும் என்பதே அனைத்து துறையினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.

தனது பட்ஜெட் உரையில் திருக்குறள் ஒன்றை உவமையாக காட்டி நிர்மலா சீதாராமன் பேசியிருக்கிறார்.

‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு’ என்ற அக்குறள் இறைமாட்சி எனும் அதிகாரத்தை சேர்ந்தது.

பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன். என்பதே இக்குறலுக்கு பொருளாகும்.

உற்பத்தி செய்தல், சேமித்தல், முதலீடு செய்தல், முன்கூட்டியே திட்டமிடல் இந்த நான்கையும் மன்னன் செய்திட வேண்டும் என்பதை இக்குறள் வலியுறுத்துகிறது. இக்குறளை அடிப்படையாகக் கொண்டு வரி விதிப்பில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

முன்னதாக 2019ல் தனது பட்ஜெட் உரையில் நாட்டின் வரிவிதிப்பு முறை கடுமையாக இருக்கக்கூடாது என்பதை, புறநானூற்றுப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கியது நினைவிருக்கலாம்.

‘காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
மாநிறை வில்லதும் பன்னாட் காகும்
நூறுசெறு வாயினும் தமித்துப் புக்கு உணினே
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடு பெரிது நந்தும்
மெல்லியன் கிழவனாகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே’

சங்க காலப் புலவர் பிசிராந்தையார், பாண்டிய மன்னன் அறிவுடை நம்பிக்கு அறிவுரை கூறும் இந்த புறநானூற்றுப் பாடலை நிர்மலா சீதாராமன் விளக்கிக் கூறியபோது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் மேசையை தட்டி ஆரவாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதே போல கடந்த ஆண்டு பட்ஜெட் உரையிலும் அவர் தமிழ் சங்க இலக்கிய நூலிலிருந்து உவமை காட்டியது நினைவுகூரத்தக்கது

பூமி திருத்தி உண் என்ற ஆத்திச்சூடி பாடலுக்கு விளைநிலத்தை உழுது அதில் பயிர் செய்து உண் என்பது பொருள். இதனை முக்கிய நோக்கமாகக் கொண்டு மோடி அரசு செயல்பட்டு வருகிறது என கடந்த ஆண்டு பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

ஆத்திச்சூடியை தொடர்ந்ந்து கடந்த ஆண்டு பட்ஜெட் உரையின் போது "பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து" என்ற குறளை கூறி அதன் பொருளையும் விளக்கினார். அதாவது நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள் வளம், இன்பமான வாழ்க்கை, நல்ல பாதுகாப்பு அல்லது காவல் ஆகிய 5 செல்வங்கள் மட்டுமே நாட்டிற்கு அழகு சேர்க்கும். எனவே திருக்குறளில் கூறியுள்ளபடி சிறப்பான ஆட்சியை பிரதமர்  மோடி செயல்படுத்தி வருகிறார் என்றார்.
Published by:Arun
First published:

Tags: 2021 BUDGET EXPECTATIONS, Budget 2021, Nirmala Sitharaman, Thirukkural

அடுத்த செய்தி