Home /News /tamil-nadu /

அதிமுக எங்கள் பங்காளி... பாஜக பகையாளி: திமுகவின் ஆர்.எஸ்.பாரதி பேச்சு

அதிமுக எங்கள் பங்காளி... பாஜக பகையாளி: திமுகவின் ஆர்.எஸ்.பாரதி பேச்சு

ஆர்.எஸ். பாரதி

ஆர்.எஸ். பாரதி

RS BHARATHI: திருவாரூர் வீதியில் கலைஞர் பெயர் வைப்பதற்கு எதிர்க்க அண்ணாமலை யார்? திருவாரூரில் உள்ள தெருவுக்கு அல்ல, அந்த ஊருக்கே கலைஞர் பெயர் வைக்கலாம். அண்ணாமலை மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என ஆர்.எஸ். பாரதி பேசினார்.

  தமிழகத்தில் அதிமுக தங்கள் பங்காளி கட்சி என்றும், தங்களுக்குள் எப்போதும் சண்டை போட்டுக் கொள்வோம், ஆனால் பாஜக தங்கள் பகையாளி கட்சி. ஒரு போதும் திமுக - பாஜகவுடன் சேராது என போடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்‌.எஸ்.பாரதி பேசினார்.

  திமுக தேனி வடக்கு மாவட்டம் சார்பில் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. போடிநாயக்கனூர் திருவள்ளுவர் சிலை அருகே மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார்.

  அப்போது அவர்,  திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்க வேண்டும் என்றால் இருக்கின்ற நேரம் போதாது. தமிழக முதலமைச்சராக ஸ்டாலின்  பொறுப்பேற்ற போது தமிழக அரசு ஐந்தே முக்கால் லட்சம் கோடி கடனில் இருந்தது.‌ ஆனால் அவரது நிர்வாகத் திறமையால் கடனை சமாளித்து வருவதோடு, மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.

  இது பெண்களுக்கான ஆட்சி. பெண்களின் முன்னேற்றம், கல்வி வளர்ச்சிக்காக செயல்படும் திமுக ஆட்சியை பாராட்டி வடமாநிலங்களில் உள்ள ஊடகங்கள் எல்லாம் பேசுகின்றனர். எல்லோரும் சொன்னார்கள் ஸ்டாலின் முதலமைச்சராக வந்ததும் எதிர்கட்சிகளை எல்லாம் பழிவாங்குவார் என, ஆனால் யாரும் பழிவாங்கப்படவில்லை.‌ ஜெயலலிதாவை விட எடப்பாடி பழனிசாமியை மரியாதையாக நடத்தியது ஸ்டாலின் தான். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் போன்றோர் முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சனம் செய்கின்றனர்.‌

  இதையும் படிங்க: ஈழப்போர் நேரத்தில் மோடி பிரதமராக இருந்திருந்தால் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்: பாஜக தலைவர் அண்ணாமலை


  அரசுப் பேருந்தில் பயணம் செய்த முதலமைச்சர் ஸ்டாலினை அங்கிருந்த பெண்கள் அனைவரும் சகோதரனைப் போல பார்த்தனர்.எடப்பாடி மீது உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தைரியம் இருந்திருந்தால் சந்தித்திருக்க வேண்டும். அதை விடுத்து உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்கியுள்ளார் என விமர்சித்தார்.

  தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக எங்கள் பங்காளி கட்சி என்றும், எங்களுக்குள் எப்போதும் சண்டை போட்டுக் கொள்வோம், ஆனால் பாஜக எங்கள் பகையாளி கட்சிஒரு போதும் திமுக - பாஜகவுடன் சேராது என்றார்.‌ மேலும் 1996ல் தமிழ்நாடு நகராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவராக  ஓ.பி.எஸ்-க்கு முதன் முதலில் மாநில அளவில் அரசியலில் பதவி வழங்கியது நான் தான் என்றார். அதனைத் தொடர்ந்து தான் 2002-ல் ஜெயலலிதாவால் முதலமைச்சராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறினார்.‌

  மேலும் படிக்க: ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்: பிரபல ரவுடியிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை

  ‘ஓ.பி‌.எஸ்-ஸை ஜெயலலிதா தேர்ந்தெடுப்பதற்கு முன் தேர்ந்தெடுத்த தனக்கு அவர் நன்றி கூற வேண்டும். அதே போல முன்னாள் முதல்வர் எம்‌.ஜி.ஆருக்கும் முதன் முதலில் 1967 தேர்தலில் டெபாசிட் செலுத்தியதும் நான் தான்.‌ அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரும் மூன்று முறை முதலமைச்சரானார்.‌ எனவே என்னுடைய கை ராசியான கை’ என்று பேசினார். இன்றைய அதிமுகவில் இருப்பவர்கள் யாரும் எம்.ஜி.ஆரை பார்த்ததில்லை.ஜெயலலிதாவை மட்டும் பார்த்திருப்பார்கள்.திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்த போது அவருடன் நான் சென்றிருந்தால் எனக்கும் பெரிய அளவில் பதவி வழங்கப்பட்டிருக்கும். ஆனால் நான் செல்லவில்லை. கடைசி வரை ஒரே கட்சி திமுகவிலேயே இருந்து விட்டேன் என்றார்.

  திருவாரூர் வீதியில் கலைஞர் பெயர் வைப்பதற்கு எதிர்க்க அண்ணாமலை யார்? திருவாரூரில் உள்ள தெருவுக்கு அல்ல, அந்த ஊருக்கே கலைஞர் பெயர் வைக்கலாம். அண்ணாமலை மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் அண்ணாமலை, முருகன் அல்ல, மோடியே வந்தாலும் அவர்களால் எதுவும் செய்து விட முடியாது. இங்கு திமுக - அதிமுக என எங்களுக்குள் எப்போதும் சண்டை இருக்கும். அதை வைத்து உங்களால் எதுவும் செய்ய முடியாது எனக்கூறினார்.

  மேலும் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றி வருகிறது. ஆனால்  அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஏன் வழங்கவில்லை என பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்த அதிமுக கேட்பதற்கு தகுதி கிடையாது.‌ அரசு ஊழியர்களை  பாதுகாக்கும் இயக்கமாக திமுக எப்போதும் இருக்கும் என்றார்.

  இதை படிக்க: மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன தமிழக அரசு.. 3 மாத காலத்திற்குள் இலவச மிதிவண்டிகள்..


  மெரினாவில் கலைஞருக்கு சமாதி கட்ட இடம்  கொடுக்க மறுத்தார் எடப்பாடி. ஆனால் திமுகவினரின் சட்டப் போராட்டத்தால் வெற்றி கிடைத்தது.‌ தற்போது முதலமைச்சரான பிறகு ஸ்டாலின் நினைத்திருந்தால் ஜெயலலிதா பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற அறிவிப்பை ரத்து செய்திருக்க முடியும் ஆனால் ஸ்டாலின் அவ்வாறு செய்யவில்லை. எங்களுக்கு யாரையும் பழிவாங்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

  இறுதியாக பேசிய அவர், ஜூன் 28ஆம் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் ஆகியோர் எங்கே போகப் போகிறார்கள் என யாருக்கு தெரியும், பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்றார். இக்கூட்டத்தில்  திமுக பேச்சாளர் சூர்யா வெற்றிகொண்டான் உட்பட திமுக  தேனி வடக்கு மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  செய்தியாளர்: பழனிகுமார்- தேனி
  Published by:Murugesh M
  First published:

  Tags: ADMK, BJP, DMK executive RS Bharadhi

  அடுத்த செய்தி