அ.தி.மு.க கூட்டணி 3-ல் 2 பங்கு வெற்றி பெற்று பா.ஜ.க சட்டசபை செல்லும் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 3-ல் 2 பங்கு வெற்றி பெற்று பா.ஜ.க சட்டசபை செல்லும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞர் அணி மாநாடு சேலம் கெஜ்ஜல்நாய்க்கன்பட்டியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்தநிகழ்வில், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், பா.ஜ.க தேசிய இளைஞர் அணி தலைவர் தேஜஸ்வி சூர்யா, மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி செல்வம், கே.டி.ராகவன், அண்ணாமலை, வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் பேசிய ராஜ்நாத் சிங், ‘மிகவும் புராதனமான தமிழ் முனிவர்கள் பிறந்த மண்ணை மிகவும் நேசிக்கிறேன். கலாச்சார ரீதியாக மிகப்பெரிய ஞானத்தை திருவள்ளுவர் தந்துள்ளார். அழகிய தமிழில் பேச ஆசைப்படுகிறேன். ஆனால் எனக்கு தமிழில் பேச முடியாதது வருத்தமளிக்கிறது. எனவே ஹெச்.ராஜா மொழிபெயர்க்கிறார். நடைபெறும் தேர்தல் மூலமாக அ.தி.மு.க கூட்டணி 3-ல் 2 பங்கு வெற்றி பெற்று பா.ஜ.க சட்டசபைக்கு செல்ல வேண்டும். சேலத்தில் இரும்பாலை, மாம்பழம் வரிசையில் மோடி இட்லி பிரசித்தி பெற்று வருகிறது. பிரச்சனையின் போதுதான் நல்லாட்சியை உணர முடியும். கொரோனா காலக்கட்டத்தில் மோடியின் அரசு எவ்வாறு சிறப்பாக செயல்பட்டது என்பது ஒரு உதாரணம்.

  கொரோனாவுக்கு எதிராக மட்டுமல்லாமல், தடுப்பூசியிலும் வெற்றி பெற்றுள்ளோம். நம் நாட்டுக்கு மட்டுமில்லாது மற்ற நாடுகளுக்கும் கொடுத்துவருகிறோம். உலக நாடுகள் அனைத்தும் ஒரு குடும்பம் என்பதற்காக உலக நாடுகளுக்கு நம் தடுப்பூசியை வழங்கிவருகிறோம். கொரோனாவால் சுகாதாரம் மற்றுமல்ல பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் யாரும் உணவுக்காக கஷ்டப்படக்கூடாது என்பதற்காக 1.70 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

  கொரோனா காலத்தில் கூட நம் நாட்டிற்கு அந்நிய மூலதனம் வேகமாக வந்துக்கொண்டிருக்கிறது. அது ஜல்லிக்கட்டு போல வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. நாட்டிலேயே கழிவறை இல்லாத வீட்டிற்கு கழிவறை, வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகளும், தரமான சாலைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

  விவசாயிகள் வாழ்வு முன்னேற அவர்களின் வருமானத்தை முன்னேற்ற மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. தமிழக மக்களுக்கு தேவையான அனைத்து அத்யாவசிய தேவைகளும் பூர்த்தி செய்யப்படும். குடிநீர் திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். இதுவரை தமிழகத்தில் 3 கோடி வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நகர்புற கட்டமைப்புக்காக மட்டும் 100 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

  சேலம், சென்னை சாலை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். பா.ஜ.க அரசியல் நடத்துவது ஓட்டுகாக அல்ல. நாட்டின் நலனுக்காக.
  இரண்டு பாதுகாப்பு வழித்தடங்கள் நம் நாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று தமிழகம். இதற்காக இதுவரை 8 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இளைஞருக்கும் வேலை கிடைக்க வேண்டும்.

  ஆனால் நமது இளைஞர்களை வேலை தேடுபவர்களாக அல்லாமல் தொழில் முனைவோர்களாக மாற்றுகிறோம். டிஜிட்டல் இந்தியா மூலம் ஊழல் குறைந்துள்ளது. அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களிடம் சென்றடைகிறது. தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக மதுரையில்1,246 கோடி ரூபாயில் எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட உள்ளது. மேலும் 6 மெடிக்கல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 3 கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது.

  மத்திய பட்ஜெட்டில் இதுவரை தமிழகத்திற்கு 32 சதவீதமாக இருந்த நிதி ஒதுக்கீடு தற்போது 42 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க ஆட்சியில்தான் டெல்லியில் முத்துராமலிங்க தேவரை மதிக்கும் வகையில் பாராளுமன்ற வளாகத்தில் அவரது சிலை நிறுவபட்டது. சீனாவுடன் 9 சுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்தியாவிற்கு சாதகமாக அமைந்துள்ளது.

  நாட்டின் எல்லை மீது ஆக்கிரமிப்பு செய்ய யாரேனும் முயன்றால் எந்த முயற்சியையும் எதிர்க்க தயங்க மாட்டோம். எந்த வகையிலும் எதிர்ப்போம். சீனா ஆக்கிமிப்பை விட்டு வெளியேற ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் நம் ராணுவ வீரர்களின் தியாகத்தை காங்கிரஸ் கட்சி அவமதித்து வருகிறது. இந்த மோசமான காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க கூட்டணி வைத்துள்ளது. இது வினோதமான கூட்டணி.

  காங்கிரஸ் கட்சியும் தி.மு.கவும் மக்களுக்கு பாரமாக அமைந்த கட்சிகள். தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஊழல் மற்றும் தாஜா செய்யும் கட்சிகளாகும். தமிழகத்தில் நிலையான நல்லாட்சி வேண்டும்; பா.ஜ.கவின் வேல்யாத்திரை தி.மு.கவை ஆட்டம் காண வைத்துள்ளது.

  தமிழக மக்கள் காங்கிரஸ் கூட்டணி கட்சியை விரும்ப மாட்டார்கள்: மக்கள் விரும்புவது தாமரை, இரட்டை இலை கூட்டணியைதான்.
  இளைஞர்களே பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களை மாபெரும் பெரும்பான்மையில் ஆட்சியில் அமர வையுங்கள். மாற்றத்திற்கான பாதையை நாம்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  ரபேல் ராணுவ விமானத்தை பற்றி காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தனர். ஆனால் சி.பி.ஐ முறைகேடுகள் ஏதும் இல்லை என நிருபித்து விட்டது. மேலும் 6 ரபேல் விமானங்கள் வர உள்ளன. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தபோது உச்ச நீதிமன்றம் சென்றார் வாஜ்பாய். முதன்முதலில் 1998-ல் தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்தபோது தமிழகத்தில் ஆதரவு அளித்தது ஜெயலலிதாதான். தமிழகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம்.

  தமிழகர்கள் மீது மோடி அதீத பிரியம் கொண்டுள்ளதால் இலங்கை அகதிகள் விஷயத்தில் நல்ல முடிவுகளை எடுத்து வருகிறோம்.
  2014 க்கு பிறகு இலங்கைக்கு மோடி சென்றார். அங்கு 27 ஆயிரம் புதிய வீடுகளை மோடி அளித்தார். மத்திய அரசு இலங்கையில் தமிழ் மக்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் இருக்க நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையிலேயே அவ்வபோது கைது செய்யப்படும் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை 1,600 தமிழ் மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதோடு 300 மீனவர்களின் படகுகள் திருப்பி கொடுத்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: