BJP VANATHI SRINIVASAN SHOULD BE DISQUALIFIED KAMAL COMPLAINTS MSB
பாஜக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் - கமல் தேர்தல் அலுவலரிடம் புகார்
கமல்ஹாசன்
வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகித்த விவகாரம் தொடர்பாக பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கமல்ஹாசன் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் கமல்ஹாசன் இன்று சென்னையில் வாக்கு செலுத்திய பின்னர் கோவை சென்றார். இதனிடையே அத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன் வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகித்து பணம் செலுத்தி வருவதாக அரசியல் கட்சியினர் பலரும் குற்றச்சாட்டு முன் வைத்தனர்.
இந்நிலையில் கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வழக்கறிஞர் அணியின் மாநில துணை செயலாளரும், கோவை தெற்கு தொகுதியின் தேர்தல் முகவருமான உதயகுமார் கோவை தெற்கு தொகுதி தேர்தல் அலுவலர் சுப்ரமணியனிடம் புகாரளித்தார்.
அதில், “கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட கெம்பட்டி காலனியில் வாக்காளர்களுக்கு குறிப்பிட்ட கடையின் பெயர் அச்சிடப்பட்ட டோக்கன்களை விநியோகித்து வருகின்றனர். அதைக்காட்டி பணம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சட்டத்திற்கு புறம்பான செயலால் அப்பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனின் ஆதரவாளர்கள் தான் இந்த டோக்கன்களை கொடுத்து வருவதாக தெரிகிறது. எனவே உரிய விசாரணை மேற்கொண்டு சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகாரளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், “பணப்பட்டுவாடா நடப்பது மற்றும் மநீம பூத் ஏஜெண்ட்கள் அனுமதி மறுத்தது தொடர்பாக புகார் அளித்துள்ளோம். பணப்பட்டுவாடா நிறைய நடந்துள்ளது. டோக்கன்கள் யார் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இதுமாதிரியான சில செயல்கள் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கை. தோல்வி பயத்தில் உள்ளவர்கள் பணப்பட்டுவாடா செய்கின்றனர். எல்லா இடத்திலும் பரவலாக பணப்பட்டுவாடா நடக்கிறது” என்றார்.