லிப் சர்வீஸ் மட்டுமே செய்பவர் கமல் - வானதி சீனிவாசன் சர்ச்சை பேச்சு

வானதி சீனிவாசன் - கமல்ஹாசன்

லிப் சர்வீஸ் மட்டுமே செய்பவர் கமல்ஹாசன் என்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. கோவை தெற்குத் தொகுதியில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இடையே தேர்தல் பிரசாரத்திலேயே கடும் போட்டியும் வார்த்தைப் போரும் தொடங்கி விட்டது.

  சமீபத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, கமல்ஹாசன் வானதி சீனிவாசன் உடன் விவாதம் செய்ய தயாரா என்று கேட்க வானதி சீனிவாசனுடன் விவாதம் செய்ய எங்கள் கட்சியின் மாணவரணியினர் போதும் என்று பதிலளித்த மக்கள் நீதி மய்யம் கட்சியினர் துக்கடா அரசியல்வாதி என்றும் விமர்சித்தனர்.

  இதற்கு பதிலளித்து வீடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன், கடின உழைப்பால் முன்னேறி வந்துள்ள தன்னைப் பார்த்து மக்கள் நீதி மய்யம் துக்கடா அரசியல்வாதி என்று சொல்கிறது என்றால், பெண்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா என கேள்வி எழுப்பினார்.

  இந்நிலையில் இன்று கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட சொர்ணாம்பிகை லே-அவுட் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட வானதி சீனிவாசன் கமல்ஹாசன் பற்றி சர்ச்சையாக பேசியுள்ளார். அவர் பேசும்போது, “என்னைப் பார்த்து துக்கடா அரசியல்வாதி என்கின்றனர் மக்கள் நீதி மையம் கட்சியினர். அந்த நடிகரை பார்த்து கேட்கிறேன். இதுவரை நீங்கள் லிப் சர்வீஸ் மட்டுமே செய்து வருபவர்.

  லிப் சர்வீஸ் என்றால் இரண்டு அர்த்தங்கள் வரும். ஒன்று உதட்டு அளவில் சேவை செய்வது. இன்னொன்று உதட்டுக்கு மட்டும் சேவை செய்வது. இதை மட்டுமே செய்யும் நீங்கள் என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று சொல்லலாமா? மக்கள் தங்களது வாக்குகளின் மூலம் கமலஹாசனுக்கு பதில் சொல்ல வேண்டும்” இவ்வாறு வானதி சீனிவாசன் பேசினார்.
  Published by:Sheik Hanifah
  First published: