'மின்தடைக்கான காரணத்தை அறிவியல் பூர்வமாக ஆராயுங்கள்' - பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை

பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை

தமிழகத்தில் திமுகவின் பி - டீமாக காங்கிரஸ் செயல்படுகிறது. தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ் தமிழகத்தில் பிராந்திய கட்சியாக மாறிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் மின் தடைக்கு தேவையில்லாத காரணங்களை கூறுவதை விடுத்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரூரில் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

    தமிழகத்தில் திமுகவின் பி - டீமாக காங்கிரஸ் செயல்படுகிறது. தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ் தமிழகத்தில் பிராந்திய கட்சியாக மாறிவிட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் சமீப நாட்களாக மின் தடை அதிகரித்து வருகிறது. இது குறித்து விளக்கமளித்த மின்சாரத்துறை அமைச்சர், கடந்த அதிமுக ஆட்சியில் எந்த பராமரிப்பு பணிகளும் செய்யப்படவில்லை என்று தெரிவித்தார். சில இடங்களில் செடிகள் வளர்ந்து கம்பிகளோடு மோதும் போது அதில் அணில்கள் ஓடும். அந்த அணில்கள் ஓடும் போது இரண்டு லைன்கள் ஒன்றாகி மின்சார தடை ஏற்படும் என கூறியிருந்தார்.

    அவரது இந்த கருத்து விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ், மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி - விஞ்ஞானம்.... விஞ்ஞானம்! சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ?’ என்று ட்விட்டரில் கிண்டலாக விமர்சித்திருந்தார்.

    இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கடந்த அதிமுக ஆட்சியில் 9 மாதங்களாக மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை, மரக்கிளைகள் வெட்டப்படவில்லை - அவை மின் கம்பிகளில் உரசுகின்றன, அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் கூட சில இடங்களில் மின் தடை ஏற்பட்டிருக்கின்றன என்று இதனையும் ஒரு காரணமாக சொன்னதாக குறிப்பிட்டுள்ளார்.

     



    'அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாக சித்தரிக்கும் ராமதாஸ், தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஏன் பராமரிப்பு பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம்! அணில்களும் மின்தடை ஏற்படுத்துகின்றன என்பது உலகில் மின்வாரியங்கள் சந்திக்கும் சவால்; தேடிப் படித்திருக்கலாம்’ என்றும் பதிலளித்துள்ளார்.

    மேலும், “பறவைகள், அணில்கள் கிளைகளுக்கிடையே தாவும் பொழுதும் மின்தடை ஏற்படுகிறது. களப்பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள். எந்த சவாலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பெரிதன்று! திட்டமிடல், களப்பணி மூலம் உண்மையான மின்மிகை மாநிலத்தை உருவாக்குவோம்” என்றும் தனது பதிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இது கூற்றுக்கு ஆதாரமாக புகைப்படங்களையும் அவர் வெளியிட்டிருந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: