உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்றால் ஆக்கிவிடுங்கள் ஆனால் அதற்காக அவர் நடித்த படங்களை பார்க்க சொல்லாதீர்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக சார்பில் மாற்றத்திற்கான மாநாடு நேஷனல் பொறியியல் கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜ.க மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, தூத்துக்குடி வடக்க மாவட்ட தலைவர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கி இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். தேர்தல் வர இன்னும் 17 மாதங்கள் உள்ளது. அப்போது மொத்தம் 400 இடங்களை பெற்று மீண்டும் மோடி பிரதமராக வருவார். தமிழக அரசின் செயல்பாட்டில் கோளாறு உள்ளது.
தமிழகத்தில் நிறைய அமைச்சர்களுக்கு வாய்கோளாறு உள்ளது. திமுக அரசுக்கு நிர்வாக கோளாறு உள்ளது. மொத்தமாக அறிவாலய அரசு கோளாறு தான். தமிழக முதல்வர் இன்றைக்கு அடிக்கடி பேசுக்கூடிய வார்த்தை திராவிட மாடல். இதுவரை யாரும் திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்கவில்லை. தூங்குவது முதல் காலை எழுவது வரை திராவிட மாடல் என்று கூறி வருகிறார் முதல்வர்.
ஒரு படத்தில் நடிகர் வடிவேலு கிணற்றை காணும் என்பது போல, மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட மரப்பாலத்தை காணவில்லை. முதல்வரின் சொந்த தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டு கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்றால் ஆக்கிவிடுங்கள்.... ஆனால் அதற்காக அவர் நடித்த படங்களை பார்க்க சொல்லாதீர்கள் என கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் இன்றையக்கு திரைப்படம் எடுப்பது, நடிப்பது எல்லாம் அவர்கள் தான். பெரிய நடிகர்கள் திரைப்படம் வெளியிட முடியாத நிலை உள்ளது. அதை வரும் பொங்கலுக்கு மக்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் என வாரிசு படத்தை குறிப்பிட்டு அண்ணாமலை பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.