நாங்குநேரி தொகுதியை பெற காய் நகர்த்தும் பாஜக... நயினார் நாகேந்திரனுக்கு வசப்படுமா?

நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிட அதிமுகவினர் மும்முரம் காட்டுவதால், பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் நாங்குநேரி தொகுதியை பெற காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • Share this:
  2001-ம் ஆண்டு முதல்முதலாக அதிமுக சார்பில் சட்டப்பேரவை தேர்தலை சந்தித்த நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி தொகுதியில் திமுகவின் ஏ.எல்.சுப்பிரமணியனை 606 வாக்குகள் வித்தியாசத்தில் வீழத்தி வெற்றிகண்டார். அத்துடன், ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்து துறை, தொழில் துறை, மின்சாரத்துறை பொறுப்புகளை வகித்தார். ஆனால், 2006 தேர்தலில் அதே தொகுதியில் திமுகவின் மாலைராஜாவிடம் 600 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மூன்றாவது முறை 2011-ல் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிட்ட போது, திமுகவின் ஏ.எல்.எஸ்.லட்சுமணனை 38,000 வாக்கு வித்தியாசத்தில் வீழத்தினார்.

  ஆனால், அப்போதைய ஜெயலலிதா அமைச்சரவையில் நயினார் நாகேந்திரனுக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும், 2016-ல் நான்காம் முறையாக மீண்டும் அவருக்கு அதிமுகவில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இம்முறை திமுகவின் ஏ.எல்.எஸ்.லட்சுமணனிடம் 701 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

  2016-ல் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு நயினார் நாகேந்திரன் பாஜகவில் ஐக்கியமானார். இதையடுத்து, 2019 மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக சார்பில் களம் கண்டு கணிசமான வாக்குகளை பெற்றபோதும் வெற்றி வசமாகவில்லை. மேலும், மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்ட நிலையில், காலியாக இருந்த மாநிலத் தலைவர் பதவி தனக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் அதிலும் நயினாருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

  இந்நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில் தொடர்ந்து 5-வது முறையாக போட்டியிட நயினார் நாகேந்திரன் ஆயத்தமானார். அதற்காக, பாஜக நிர்வாகிகள் அழைத்து வந்து, பேரணி, நடைபயணம், பொதுக்கூட்டம் நடத்தி தனது பலத்தை நிரூபித்தார்.

  ஆனால், திருநெல்வேலி தொகுதியை விட்டுக்கொடுக்க கூடாது என்று அதிமுக மாவட்ட செயலாளர் கணேஷ் ராஜா, முன்னாள் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா உள்ளிட்டோர் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

  இதுதொடர்பாக, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நயினார், திருநெல்வேலி தொகுதி கிடைக்காவிட்டால், அதே மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி தொகுதியை பெறுவதற்கு மும்முரம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  நாங்குநேரி தொகுதியை பொறுத்தவரை, நாடார், தேவேந்திர குல வேளாளர், முக்குலத்தோர் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். இருப்பினும், வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் அளவில் தேவேந்திரகுல வேளாளர்கள் உள்ளனர்.

  7 உட்பிரிகளை சேர்ந்தோரை தேவேந்திர குல வேளாளர்கள் என அழைக்கும் அரசாணையை பிறப்பிக்க வலியுறுத்தி, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அந்த சமூகத்தினர் கடந்த இடைத் தேர்தலைப் புறக்கணித்தனர்.

  தற்போது, அதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அவர்களின் வாக்குகள் பாஜகவுக்கு கிடைக்கும் என நயினார் நாகேந்திரன் கருதுவதாக அவரின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  மேலும் படிக்க... எம்ஜிஆரை சட்டப்பேரவைக்கு முதல்முறையாக அனுப்பிய பெருமைமிகுந்த தொகுதியில் கமல்ஹாசன் போட்டியா?

  அத்துடன், தான் சார்ந்த முக்குலத்தோர் சமூகத்தினரும் பெரும்பான்மையாக இருப்பதால் நாங்குநேரி தொகுதியில் எளிதாக வெற்றி கிடைக்கும் என நம்புகிறார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: