கன்னியாகுமரி கருமன்கூடல் பகுதியில் பாஜக பிரமுகர் கல்யாணசுந்தரம் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
"ஆபரேஷன் ஆக்டோபஸ்" என்கிற பெயரில், நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில், தேசிய புலனாய்வு முகமையைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை நடத்தினர். தமிழகத்தில் 12 இடங்களில் நடைபெற்ற சோதனையில் பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதனைதொடர்ந்து, கடந்த 3 நாட்களாக பாஜக, ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகிகளின் வீடுகள், கடைகளை குறிவைத்து பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே மண்டைக்காடு அருகே கருமன்கூடல் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகரும், தொழிலதிபருமான கல்யாணசுந்தரம் என்பவர் வீட்டில், நேற்றிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிச்சென்ற காட்சி அங்குள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. வீசப்பட்ட பெட்ரோல் குண்டு சொகுசு காரின் முன்பக்கத்தில் விழுந்து சிறிது நேரம் எரிந்தது. ஆனாலும் தீ பரவாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டு, 2 சொகுசு கார்களும் தப்பின. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்டைக்காடு போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் வீடு, அலுவலகங்களில் கடந்த வியாழக்கிழமை என்.ஐ.ஏ., சோதனை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்து அமைப்பு நிர்வாகிகளின் வீடுகளில் கடந்த இரண்டு நாட்களாக அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், சேலம் மாநகரில் அம்மாபேட்டை பரமக்குடி நன்னுசாமி தெருவில் வசித்து வரும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ராஜன் இல்லத்தில் இன்று அதிகாலை இரண்டு பேர் வந்து மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை பற்ற வைத்து வீசிவிட்டு தப்பினர்.
*கன்னியாகுமரி - மண்டைக்காடு பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு.... கருமங்கூடல் பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் BJP என்பவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.* pic.twitter.com/vGajDrAekH
— 🇮🇳🚩Dinesh Nair🚩🇮🇳 (@dinesh02297298) September 25, 2022
நல்வாய்ப்பாக குண்டு வெடிக்காததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்த மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து மண்ணெண்ணெய் குண்டு வீசியது குறித்து துப்புத்துலக்க துணை ஆணையர் மாடசாமி தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த ஆரிப் என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதனையறிந்த இஸ்லாமியர்கள் அம்மாபேட்டை காவல் நிலையம் முன் திரண்டதால் அசாதாரண சூழல் நிலவியது.
இதேபோன்று திருப்பூரின் அங்கேரிபாளையத்தில் உள்ள பாஜக கோட்ட பொறுப்பாளர் பாலு என்பவரது வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பாலு தற்போது வேறு வீட்டிற்கு குடும்பத்துடன் மாறி சென்ற நிலையில், அவர் இருந்த பழைய வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 2,500க்கும் மேற்பட்ட போலீசார் கோவை மாநகரம் முழுவதும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் ஆறு இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து, உக்கடம், டவுன் ஹால், காந்தி பூங்கா பகுதிகளில் சிஆர்பிஎஃப் அதிரடிப்படை, தமிழக காவல்துறை கமாண்டோ விரைவுப்படையினர் ஆகியோர் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. சாலையின் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.