Home /News /tamil-nadu /

பிரதமர் வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவேன் என்று எப்போது கூறினார்?

பிரதமர் வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவேன் என்று எப்போது கூறினார்?

BJP Leader Annamalai

BJP Leader Annamalai

'ஆன்லைன் ரம்மியை தடை செய்ய கருத்து கேட்கிறோம் என காலம் தாழ்த்தாமல், முதல்வர் ஸ்டாலின் உடனடியாக ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய வேண்டும்' - அண்ணாமலை

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai, India
    பிரதமர் வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவேன் என்று எப்போது கூறினார்? எத்தனை முறை இந்த பொய்யை சொல்லுவீங்க... நிரூபியுங்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை  நேற்று நேரில் சந்தித்து அர்ஜுன மூர்த்தி பாஜகவில் இணைந்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, மாநில அரசின் மின் கட்டண உயர்வை எதிர்த்து பாஜக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளோம். அது அரசிற்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளது. மின் கட்டணத்தை குறைப்பதா வேண்டாமா என மக்களிடம் கேட்பது மிகப்பெரிய நாடகமாக உள்ளது.

    ஜனநாயக முறைப்படி மக்கள் கருத்தை கேட்டு பாலிசி மாற்றம் செய்வார்களா எனத் தெரியவில்லை. இப்பொழுதே மின்சாரத்துறை அமைச்சர் ஆங்காங்கே பேரம் பேச ஆரம்பித்து விட்டார். பெரும் நிறுவனங்கள் , ஜவுளி நிறுவனங்கள் தனியாக வாங்க என வசூல் வேட்டை நடத்துவதற்காகத் தான் இந்த நாடகம். மக்களிடம் கருத்து கேட்டு விட்டு மின் கட்டணத்தை குறைக்கின்றோம் என கூறுவது அனைத்து நிறுவனங்களிடம் இருந்து வசூல் வேட்டை நடத்துவதற்காக போடப்படும் கபட நாடகம்.
    இதற்காகத் தான் மக்களிடம் கருத்து கேட்கின்றனர். அவர்கள் ஏற்றிய மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பது தான் பாஜக கட்சியின் கோரிக்கை. அதனை இந்த மாநில அரசு செய்ய வேண்டும். எத்தனை முறை தான் இவர்களின் ஊழல் குறித்தே பேசுவது.

    ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய வேண்டும் :

    ஆன்லைன் ரம்மியால் இதுவரை 30 தற்கொலை நடந்துள்ளதாக காவல் துறை அறிக்கையில் பதிவாகி உள்ளது. அப்படி இருக்கும் போது முதலமைச்சர் தொடர்ந்து கருத்து கேட்கின்றேன் என என்ன கருத்தை அவர் கேட்கின்றார். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய கருத்து கேட்கிறோம் என காலம் தாழ்த்தாமல், உடனடியாக ஆன்லைன் ரம்மியைத் தடை செய்ய வேண்டும். ஆன்லைன் ரம்மி விளம்பரம் இணையத்தளத்தில் வருகின்றது. பெரிய நடிகர்கள் அதில் நடிக்கிறார்கள். தமிழகத்தில் இது தலையாய பிரச்சனை. 30 பேர் இறந்துள்ளனர். மாநில அரசின் பிரதான பிரச்சனை இது.

    பாஜக தலைவர் அண்ணாமலை , அர்ஜுன மூர்த்தி


    மோடி மக்களுக்கு கொடுத்தது எதுவும் இலவசம் கிடையாது :

    தமிழகத்தில் நமக்கு தற்போது விவாதமாக இருப்பது இலவசங்கள் நமக்கு வேண்டுமா? வேண்டாமா என்பது. இது ஒரு பெரிய விவாத பொருளாக உள்ளது. உச்சநீதி மன்றத்தில் இருக்கும் பி.எல் என்பது இலவசங்களை வைத்து ஆட்சியாளர்கள் எப்படி ஆட்சியை பிடிக்கிறார்கள் என்பது தானே தவிர ஒரு குடிமகனுக்கு அரசு தனது கடமையாக செய்ய வேண்டியவற்றை பற்றி இலவசம் என யாரும் பேச வில்லை. அது அரசின் கடமை (Public good) . Public goods என்பது மக்களுக்கு கொடுக்க வேண்டிய ஒன்று. பொருளாதாரம், கல்வி , சுகாதாரம் இவை Public goods என்பதில் வந்து விடும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு , குடிநீர் இல்லாதவர்களுக்கு குடிநீர் , வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கி கணக்கு இது இலவசம் இல்லை. மக்களுக்கு கொடுக்க வேண்டிய ஒன்று. இது தேவை . அமெரிக்காவில் கல்வி இலவசமாக வழங்கப்படுகின்றது. ஆனால் இவர்கள் சொல்லும் இலவசம் என்பது வேறு,



    பாஜக மக்களுக்கு அடிப்படை உரிமையாக வருவதை மக்களுக்கு எப்போதும் தடுக்காது. இன்னமும் அதிகமாக கொடுக்க வேண்டும் என்று தான் நினைக்கும். உதாரணத்திற்கு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம். பாஜகவின் நோக்கம் இலவச மின்சாரம் மட்டும் அல்ல. இலவச மூன்று பேஸ் கரண்ட். 24 மணி நேரம் விவசாயிகளுக்கு மின்சாரம் இலவசமாக கொடுக்க வேண்டும் என்று தான் எண்ணுகின்றோம்.   இலவசங்களால் நாடு அழிகின்றது என்பது உண்மை. அதற்காக ஒரு கட்சி மீது பழி போடவும் முடியாது.

    அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை பாஜக எப்போதும் எதிர்த்ததில்லை. எந்த ஆகம விதிகளும் மனிதனை ஜாதி அடிப்படையில் பிரிக்கவில்லை. நாம உருவாக்கிய ஒன்று. கோவை ஈஷா தேவி பூஜையை பெண்கள் செய்கின்றார்கள். சில தமிழக கோவில்களில் பெண்கள் அர்ச்சனை செய்வர்.இது காலம் காலமாக நடப்பது. இதனை நாம் மாற்ற முயற்சிக்க கூடாது. சாதி அடிப்படையில் பிரிவினை இருந்தால் அதனை நாம் மாற்ற வேண்டும் .

     

    நீங்கள் எல்லா சுமையையும் மத்திய அரசின் மீது ஏற்றுகின்றீர்கள். எல்லாரும் பிரதமரின் அப்பாய்ண்ட் மென்ட் வாங்குறீங்க. பேப்பர் தூக்கி கொண்டு ரூமின் உள்ளே செல்கின்றனர். தமிழ்நாட்டில் ஊடகங்கள் முன் வீர வசனம் பேசுகின்றனர். டெல்லி போனவுடன் ரூமின் உள்ளே நிதி இல்லை என்னை காப்பாற்றுங்கள் என்கின்றீர்கள்.

    20 வருடத்திற்கு முன்னர் தமிழ்நாடு பணம் அதிகம் இருந்த மாநிலம். அப்போது கொடுத்த இலவசங்கள் பற்றிய பேச்சு அல்ல இது. அப்போது பணம் இருந்தது. 2000த்தில் கொடுத்த திமுக தேர்தல் வாக்குறுதி பற்றி நான் பேச வில்லை. அப்ப நிலைமை வேறு. காலம் வேறு. இன்று இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலம் தமிழ்நாடு. இன்று தமிழகம் 6 லட்சம் கோடி கடனில் உள்ளது. இந்த வருடம் 1 லட்சத்து பத்தாயிரம் கோடி கடன் வாங்கினால் 7 லட்சம் கோடி கடன் ஆகி விடும் என தெரிவித்தார்.

    அப்போது, பிரதமர் மோடி ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவேன் என்று கூறியுள்ளாரே தேர்தல் வாக்குறுதியில் என நிருபர் எழுப்பியு கேள்விக்கு,  ‘முதலில் நிரூபியுங்கள். அந்த வீடியோவை இன்றே எனக்கு காட்டுங்கள். எங்காவது பிரதமர் மோடி அவ்விதம் பேசியிருந்தால் அதனை எனக்கு காட்டுங்கள் நான் இங்கு தான் உள்ளேன். இல்லை எனில் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த வீடியோ உண்மை எனில் அடுத்த பிரஸ் மீட்டில் என்னோடு அமர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும். எத்தனை நாட்கள் தமிழகத்தில் இதே பொய்யை திரும்ப திரும்ப சொல்லுவீங்க’ என காட்டமாக பதில் அளித்தார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Annamalai, Arjuna Moorthy, BJP, Online rummy, PM Modi

    அடுத்த செய்தி