Home /News /tamil-nadu /

18 கேள்விக்கு பதில் சொல்லுங்க.. அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு நாங்க வரல.. பாஜக அண்ணாமலை அதிரடி அறிக்கை

18 கேள்விக்கு பதில் சொல்லுங்க.. அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு நாங்க வரல.. பாஜக அண்ணாமலை அதிரடி அறிக்கை

அண்ணாமலை

அண்ணாமலை

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

  பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், ‘மருத்துவக் கல்வியில் சேர்வதற்கான நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய சட்ட முன்வடிவை ஆளுநர் அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காத நிலையில் இதுகுறித்து விவாதிக்க அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி இருப்பதால் அதில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு அனுப்பி உள்ளீர்கள்.

  தங்கள் அன்பான அழைப்புக்கு நன்றி.

  தமிழக அரசுக்கு மக்கள் நலனுக்காக முழு ஒத்துழைப்பு கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழக மக்களுக்கும், நம் தமிழ் மாநிலத்தின் அனைத்து தேவைகளுக்கும் மக்களுக்காக குரல் கொடுப்பதற்கும் பா.ஜ.க தயாராக உள்ளது. தாங்கள் கூட்டியுள்ள இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தேவை மற்றும் அவசியம் குறித்து, எங்களது கீழ்கண்ட சந்தேகங்களுக்கு பதில் அளிக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

  1. மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக இதற்கு முன்னர் 2017 ஏப்ரல் மாதம், இதேபோன்ற ஒரு சட்ட முன் வடி தயாரிக்கப்பட்டு 2017 மே மாதம் ஒப்புதல் பெறப்பட்டு 2017 செப்டம்பர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. பின்னர், 2017 செப்டம்பர் 18-ம் நாள் அந்த சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் மாநில அரசுக்கு 22-ம் தேதி செப்டம்பர் மாதம் 2017 குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது என்ற விபரம் தாங்கள் அறிந்ததே.

  2. முன்னர் நடந்தது போல இப்போது ஒரு முயற்சி தேவையா? பொது சட்ட முன்வடிவு எண் 43. மீண்டும் அதே போல உருவாக்கப்பட்டு அதே வழிமுறையில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படுகிறது. இனி மறுபடி சட்டமன்றம் மாநில ஆளுநருக்கு அதை மீண்டும் அனுப்பும். அவர் அதைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார். மீண்டும் அது திரும்பி வரும் என்று நன்றாகத் தெரிந்தும் அதை வைத்து அரசியல் செய்யலாம் என்ற தப்புக் கணக்கில் இருக்கின்றீர்களா?

  3. ஏற்கெனவே குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட ஒரு சட்ட முன் வடிவை மீண்டும் அனுப்புவதால் தாங்கள் என்ன சாதிக்க நினைகிறீர்கள். அல்லது மக்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்து ஏதாவது செய்து, அரைத்த மாவை அரைத்து தங்கள் இருப்பை காட்டிக் கொள்ள நினைக்கிறீர்களா? தயவு செய்து மாணவர்களின் வாழ்க்கையோடும், அவர்கள் உயிரோடும் விளையாடி அரசியல் செய்ய நினைக்காதீர்கள். அதை பா.ஜ.க அனுமதிக்காது.

  4. மேலும் 2013-ம் ஆண்டு வேலூர் சி.எம்.சி மருத்துவமனை மற்றும் இந்திய அரசு வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பில் நீட் தேர்வு எந்த சட்டவிதிமுறைகளுக்கும் முரணானதல்ல. மக்கள் அடிப்படை உரிமைக்கும் எதிரானதல்ல என்று தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்புக்கும் பிறகுமா, உங்களுக்கு சட்ட ரீதியான சந்தேகங்கள் வருகிறது.

  5. நாடாளுமன்றத்தில் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அப்போதைய சுகாதாரத் துறை இணையமைச்சராக இருந்தவர் காந்தி செல்வன் தி.மு.கவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர். 2010-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி regulation of graduate medical examination என்ற தலைப்பிலே, இந்திய மெடிக்கல் கவுன்சில் சட்டம் 1946 விதி 10(2)ன் கீழ் மத்திய அரசுக்கு பொதுவான நுழைவுத் தேர்வு நடத்த அதிகாரம் இருப்பதாக கூறி, முதன்முதலில் மருத்துவ கல்வி நுழைவுத் தேர்வான நீட்டைக் கொண்டு வந்து முன்மொழிந்தவர். தி.மு.கவின் அமைச்சர் காந்தி செல்வன் நீங்கள் கொண்டு வந்த சட்டத்தை நீங்களே எதிர்ப்பது சரியா?

  6. தமிழக பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 2019-ம் ஆண்டில் 48.57 சதவீதம், 2020-ம் ஆண்டில் இது 57.40 சதவீதம் அளவிற்கு அதிகரிக்கிறது. அதேபோல தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 2019-ம் ஆண்டில் 1,017 பேர், 2020-ம் ஆண்டில் இது 17,101 பேராக அதிகரித்துள்ளது. ஆக தமிழ் மொழி வழியில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 17 மடங்கு அதிகரித்துள்ளது. இது வளர்ச்சியா? வீழ்ச்சியா? என்பதை தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்’ என்பது உள்ளிட்ட 18 கேள்விகளை எழுப்பி அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Karthick S
  First published:

  Tags: Annamalai, Neet Exam

  அடுத்த செய்தி