Home /News /tamil-nadu /

ஜெயக்குமாரைக் கைது செய்தததை வன்மையாக கண்டிக்கிறேன்- அண்ணாமலை

ஜெயக்குமாரைக் கைது செய்தததை வன்மையாக கண்டிக்கிறேன்- அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலை

ஜெயக்குமாரைக் கைது செய்யப்பட்டதற்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

  கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவை சேர்ந்த ஒருவரை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கியதாக எழுந்த புகாரின்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கைதுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-

  ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்தது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் அராஜகத்தையும், வன்முறை வெறியாட்டத்தையும், ஜனநாயகப் படுகொலையையும் தட்டிக்கேட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை திடீரென்று காவல்துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

  இதையும் படிங்க - ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கியது அ.தி.மு.க அரசு - எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

  ஜெயக்குமார், ஜனநாயகத்தைக் காப்பாற்றுகின்ற மனப்பான்மையோடு, கள்ள ஒட்டு போடவந்த திமுகவினரை தடுத்து நிறுத்தி இருக்கிறார். இது எந்த வகையில் முறைகேடான செயல்? பல ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், சட்டப் பேரவைத் தலைவராகவும், பல்வேறு துறைகளின் அமைச்சராகவும், அரசியலில் மிக மூத்த உறுப்பினராகவும் விளங்குகின்ற ஜெயக்குமார், கள்ள ஓட்டு போடுவதை தடுப்பதற்குண்டான முயற்சியை எடுத்தார்.

  ஒரு இடத்தில் சட்ட விரோத செயலிலோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயலிலோ ஈடுபடுகின்ற ஒரு நபரைப் பிடித்து, அவர் தப்பி ஓடிவிடாதபடி கை கால்களைக் கட்டி காவல் துறையிடம் ஒப்படைப்பதை, தமிழ் நாட்டில் எத்தனையோ இடங்களில், இதற்கு முன் எத்தனையோ முறைகள் நடைபெற்றதை நாம் பார்த்திருக்கிறோம்.

  இதையும் படிங்க - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட பரபரப்பு வீடியோ காட்சிகள்!!

  அதைப் போலவே, கள்ள ஓட்டு போட வந்த ஒருவரை கையும் களவுமாகப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்க அங்கிருந்தவர்கள் முயற்சித்தபோது, அந்த நபரை அடிக்க வேண்டாம் என்று சொல்லி காப்பாற்றி, காவல் துறையிடம் ஒப்படையுங்கள் என்று பொறுப்புடன் செயல்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தது நியாயம் தான் என்பதை தமிழ் நாட்டில் எல்லோரும் ஏற்றுக்கொள்வர்.

  உள்ளாட்சித் தேர்தல் என்றாலே அது, திமுகவினரின் முறைகேடும், கள்ள ஓட்டும், அராஜகமும், அடாவடியும் நிறைந்த ஒன்று என்ற மனநிலை மக்களுக்கு ஏற்பட்டு, மிகக் குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகி இருப்பதை மூடி மறைக்கவும், இந்தத் தேர்தல் மூலமாக தங்களுக்கு அங்கீகாரம் வந்துவிடும் என்று நம்பிக்கொண்டு அதற்கேற்ற வகையில் முடிவுகளை மாற்றி அறிவிக்க திமுக முயற்சிப்பதன் வெளிப்பாடாகவே ஜெயக்குமாரை சட்ட விரோதமாக காவல் துறையினரைக் கொண்டு திமுக அரசு கைது செய்திருக்கிறது என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்.

  2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலில் நிகழ்ந்த ஜனநாயகப் படுகொலையை சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி கண்டித்து, மறு தேர்தல் நடத்தும் நிலை ஏற்பட்டதை மக்கள் மறந்துவிடவில்லை.

  இத்தனை ஆண்டுகள் ஆகியும் கூட திமுக தனது ஜனநாயக விரோதச் செயல்களை கைவிடாதிருப்பது கண்டிக்கத்தக்கது. திமுகவின் இந்த அராஜகச் செயல்களையும், முறைகேடாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது மேற்கொள்ளும் தாக்குதல்களையும், சட்டத்தின் துணை கொண்டு கழகம் எதிர்த்து நிற்கும்; முறியடிக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.

  நாளை நடைபெற இருக்கும் வாக்கு எண்ணிக்கையின் போது திமுகவினர் காவல் துறையின் உதவியுடன் எந்த அளவிற்கு ஜனநாயகப் படுகொலையில் ஈடுபடுவார்கள் என்பதற்கு முன்னோட்டமாக ஜெயக்குமார் கைது அமைந்திருக்கிறது. இத்தகைய சலசலப்புகளைக் கண்டு அஞ்சுகின்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கிடையாது. ஆகவே, நாளைய வாக்கு எண்ணிக்கையின் போது கழக உடன்பிறப்புகள் விழிப்புடன் இருந்து, தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவித்திருந்தனர்.


  இதுதொடர்பாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பதிவில், ‘திமுக அரசு தன்னுடைய அரசியல் காழ்ப்புணர்ச்சியால் முன்னாள்  அமைச்சர் ஜெயக்குமாரைக் கைது செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன். கள்ள ஓட்டு போட்டவர்களை விட்டுவிட்டு அதை தடுக்க முயற்சித்தவரை கைது செய்திருப்பது நகைப்புக்குரியது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Musthak
  First published:

  Tags: Annamalai, Jayakumar

  அடுத்த செய்தி