நிபந்தனை ஜாமினில் கையெழுத்து போட வந்த பாஜக பிரமுகர் காவல்நிலைய வாசலில் கடத்தல்!

கடத்தப்பட்ட பாஜக பிரமுகர் நாகராஜ்

பாஜக பிரமுகரும், மோசடி குற்றவாளியுமான நபரை காவல் நிலைய வாசலிலேயே வைத்து கடத்திய நிலையில் அவரை 4 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்

  • Share this:
அண்ணாமலைபுரம் போட் கிளப் பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி நாகராஜ்(31) என்பவர் தனக்கு பாஜகவில் உள்ள தலைவர்கள் மிகவும் நெருக்கம் எனக்கூறி அடையாறு பகுதியைச் சேர்ந்த முகமது நூறுதீன் என்பவருக்கு தொழில் செய்வதற்காக ரூபாய் 75 கோடி வங்கியிலிருந்து லோன் வாங்கி தருவதாக பத்திர பதிவிற்கு 6.5 லட்சமும், 60 லட்சம் ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர், 22 லட்சம் டைமண்ட் நகைகள் என மொத்தம் 92 லட்ச ரூபாயை கடந்த 2019 ம் ஆண்டு பெற்று மோசடி செய்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் இவர் சாஸ்திரி நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சமீபத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த நாகராஜ் தினந்தோறும் சாஸ்திரி நகர் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம் போல இன்று காலை காவல் நிலையத்திற்குச் சென்று கையெழுத்திட்டு வெளியே வரும்போது ஃபார்ச்சூனர் காரில் வந்த 8 மர்மநபர்கள் நாகராஜை கடத்திச் சென்றுள்ளனர். உடனடியாக அடையாறு காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு மோசடி குற்றவாளியை கடத்தி சென்ற மர்ம நபர்களை பிடிக்க தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

சிசிடிவி காட்சிகள் மற்றும் மோசடி குற்றவாளியை கடத்தி சென்ற மர்ம நபர்களின் செல்போன் சிக்னலை வைத்து விசாரணை மேற்கொண்டதில் மோசடி குற்றவாளியான நாகராஜ் மற்றும் அவரை கடத்திய மர்ம நபர்கள் போரூரில் உள்ள ஒரு ஜிம்மில் இருப்பதாக தெரியவந்தது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார் கடத்தப்பட்ட மோசடி குற்றவாளி நாகராஜ் மற்றும் அவரை கடத்திச் சென்ற எட்டு நபர்களையும் கைது செய்தனர். மேலும், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட பார்ச்சூனர் காரையும் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

Also read: காபுலை விட்டு கடைசியாக வெளியேறும் முன் அமெரிக்க படையினர் செய்த ராஜதந்திரம் – தாலிபான்கள் அதிர்ச்சி!

விசாரணையில் அவர்கள் மனோகரன், விஜய் (31), சிவகுமார் (45), அலெக்ஸ்(36), ஐயப்பன் (29), கன்னியப்பன்(34), மணிகண்டன் (28), சத்ய சாய் பாபா (40) என தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் மனோகரன் மற்றும் அவர்களது 7 நண்பர்கள் சேர்ந்து தான் மோசடி குற்றவாளியும் பாஜக பிரமுகருமான நாகராஜை கடத்தியது தெரியவந்தது.

நாகராஜை கடத்தியவர்கள்


இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மனோகரன் என்பவருக்கு தொழில் தொடங்குவதற்காக வங்கியில் ரூபாய் 10 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 10 லட்சம் பணத்தை பெற்று மோசடி செய்ததாகவும் ஆண்டுகள் பல ஆனபோதும் மனோகரனுக்கு வங்கி கடன் வாங்கி தராமலும் கொடுத்த பணத்தை திருப்பித் தராமலும் பாஜக பிரமுகரும் மோசடி குற்றவாளியுமான நாகராஜ் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் கொண்ட மனோகரன் தனது நண்பர்களின் உதவியுடன் பாஜக பிரமுகரும் மோசடி குற்றவாளியுமான நாகராஜை கடத்த திட்டமிட்டுள்ளார்.

நாகராஜை கடத்தியவர்கள்


இந்த நிலையில் மோசடி வழக்கில் சிறைக்குச் சென்று நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த பாஜக பிரமுகர் நாகராஜ் தினமும் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வருவது தெரியவந்தது. அதன்பேரில் இன்று காலை நாகராஜ் கையெழுத்திட்டு விட்டு காவல் நிலையத்திற்கு வெளியே வரும்போது காவல் நிலைய வாசலிலேயே வைத்து மனோகரனும் அவரது 8 நண்பர்களும் நாகராஜை கடத்தியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாஜக பிரமுகர் நாகராஜ்


நாகராஜை கடத்திச்சென்று போரூரில் உள்ள அலெக்ஸ் என்பவருடைய ஜிம்மில் வைத்து கட்டிப் போட்டு பணம் தர சொல்லி வற்புறுத்தியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து நாகராஜை மீட்ட போலீசார் அவரை கடத்திய 8 நபர்களையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also read: ஓவைசி கட்சியினர் தாலிபான்கள் போன்றவர்கள் – பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை!

கடத்தப்பட்ட  நாகராஜ் கடந்த 2016ஆம் ஆண்டு ராணிப்பேட்டை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக நின்று படுதோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகராஜ் 2017ஆம் ஆண்டு ஈசிஆர் பகுதியில் ஃபெவினா என்ற பெண்ணுக்கு வீடு வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடி சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த நாகராஜின் தந்தை விஷ்னு சாகர்(73), சகோதரி பூர்ணிமா(40) ஆகியோர் மீதும் கடந்த ஆண்டு சாஸ்திரிநகர் போலீசார் மோசடி, நம்பிக்கை மோசடி உட்பட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மோசடி வழக்கில் சிறைக்குச் சென்று நிபந்தனை ஜாமீன் கையெழுத்திட வந்த  நாகராஜனை கடத்திச் சென்ற 8 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நான்கு மணி நேரத்தில்  கடத்தலில் ஈடுபட்டவர்களை  கைது செய்துள்ள அடையாறு காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையிலான போலீசாரை, காவல் துறை உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
Published by:Arun
First published: