அறிவிக்கப்படாத வேட்பாளருக்காக வெடி வெடித்து கொண்டாடிய பாஜக தொண்டர்கள்- மதுரையில் நடந்த உச்சகட்ட காமெடி

அறிவிக்கப்படாத வேட்பாளருக்காக வெடி வெடித்து கொண்டாடிய பாஜக தொண்டர்கள்- மதுரையில் நடந்த உச்சகட்ட காமெடி

பா.ஜ.க கொண்டாட்டம்

மதுரையில் வானதி ஸ்ரீனிவாசன் என்ற பெயரை ஸ்ரீனிவாசன் என்று புரிந்துகொண்டு வெடிவெடித்து ஆர்பாட்டம் செய்து நகைச்சுவைக்கு உள்ளாகினர் பா.ஜ.க தொண்டர்கள்.

  • Share this:
பாஜக வேட்பாளர் பட்டியல் வாசிக்கையில் வானதி ஸ்ரீனிவாசன் பெயரை ஸ்ரீனிவாசன் என நினைத்து மதுரை வடக்கு தொகுதி அலுவலகத்தில் தொண்டர்கள் ஆர்ப்பரித்து, வெடி வெடித்து கொண்டாடினர். ஆனால் அந்த சந்தோஷம் அவர்களுக்கு சில நிமிடங்கள் கூட நீடிக்கவில்லை.

அதிமுக கூட்டணியில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதியில் திமுக சார்பில் கோ.தளபதி, அமமுக சார்பில் ஜெயபால் ஆகியோர் போட்டியிடும் நிலையில், பாஜக சார்பிலும் முக்கிய பிரமுகர் யாரேனும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி, பாஜக துணை தலைவர் பேராசரியர் ஸ்ரீனிவாசன் தான் இந்த தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என முடிவு செய்து கொண்ட பாஜக தொண்டர்கள் மதுரை புதூர் பகுதியிலுள்ள பாஜக அலுவலகத்தில் அவருடைய முகம் பொறித்த விளம்பர பதாகைகள் வைத்து தேர்தல் பணிகளையே துவக்கி விட்டனர்.

இந்த நிலையில் தான் திருப்பரங்குன்றம் தொகுதியில் சிட்டிங் திமுக எம்.எல்.ஏ வாக இருந்த மருத்துவர் சரவணனுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் இருந்த அவர் பாஜகவில் இணைய உள்ளதாக, கடந்த ஓரிரு நாட்களாக வெளியான தகவல்களை அவர் மறுத்து வந்தார். ஆனால், இன்று காலை சென்னையில் பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.

இதனை தொடர்ந்து மருத்துவர் சரவணனுக்கு மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொண்டர்கள் அலுவலகத்தை பூட்டி ஆர்பாட்டம் செய்தனர். சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் தீக்குளிக்க கூட சில தொண்டர்கள் திட்டமிட்டு இருந்தனர்.

இப்படியான அசாதாரண சூழலுக்கு இடையே பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு கொண்டிருந்தது. அப்போது, வானதி ஸ்ரீனிவாசன் பெயர் வாசிக்கப்பட்ட போது, அதை சரியாக கவனிக்காமல் ஸ்ரீனிவாசன் என தொண்டர்கள் நினைத்துக் கொண்டனர். உடனே, கத்தி, விசிலடித்து ஆரவாரம் செய்து, பட்டாசு வெடித்து கொண்டாட துவங்கினர்.

சில நிமிடங்கள் இந்த கொண்டாட்டம் நீடித்த நிலையில், வேட்பாளர் பட்டியலை மீண்டும் ஒருமுறை பார்த்த போது அதில் ஸ்ரீனிவாசன் பெயர் இல்லாதது கண்டு தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதைவிட அதிர்ச்சி ஸ்ரீனிவாசன் பெயருக்கு பதிலாக சரவணன் பெயர் இடம் பெற்றிருந்தது தான்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: