எத்தனை நாட்கள் கழிவுநீர் தொட்டியை மனிதர்களால் சுத்தப்படுத்த போகிறோம். சுத்திகரிப்பு இயந்திரங்களை வாங்க தமிழக அரசு தயங்குவதற்கு காரணம் என்ன? மனித உயிரை விடவா இயந்திரத்தின் விலை அதிகமாகிவிட்டது? என கழிவுநீர் தொட்டியில் விழுந்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக
பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த லட்சுமணன், மாடக்குளம் பகுதியை சேர்ந்த சிவகுமார் மற்றும் சரவணன் ஆகிய மூன்று மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் கழிவு நீர் அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்தநிலையில், 3 பேரும் எதிர்பாராத விதமாக கழிவு நீர் தொட்டிக்குள் விழுந்து விஷவாயுவால் தாக்கப்பட்டனர். தொட்டிக்குள்ளே அவர்களின் அலறல் சத்தம் கேட்டுள்ளது, உடனடியாக அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இந்த சம்பவத்தில் மூவரும் உயிரிழந்தனர்.
இதனைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அதில் , மதுரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தஒப்பந்த தொழிலாளர்கள் சரவணன் சிவக்குமார், லக்ஷ்மணன் ஆகியோர் விஷ வாயு தாக்கி ஒருவர் பின் ஒருவராக தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
தேசிய துப்புரவு பணியாளர் ஆணையத்தின் தகவல் படி, இந்தியாவில் அதிகப்படியான உயிரிழப்பு தமிழகத்தில் தான் நடைபெறுகிறது என்பது வருந்தத்தக்க செய்தி. குடும்பத்திற்கு இழப்பீடும் அரசுப் பணியும் தந்து ஆதரிக்க வேண்டும் என்று மாநில அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்!
எத்தனை நாட்கள் கழிவுநீர் தொட்டியை மனிதர்களால் சுத்தப்படுத்த போகிறோம். சுத்திகரிப்பு இயந்திரங்களை வாங்க தமிழக அரசு தயங்குவதற்கு காரணம் என்ன? மனித உயிரை விடவா இயந்திரத்தின் விலை அதிகமாகிவிட்டது? என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.