Home /News /tamil-nadu /

அதிமுக கூட்டணியில் இழுபறி... தனித்து நிற்க தயாராகும் பாஜக! அண்ணாமலை நாளை முக்கிய முடிவு

அதிமுக கூட்டணியில் இழுபறி... தனித்து நிற்க தயாராகும் பாஜக! அண்ணாமலை நாளை முக்கிய முடிவு

அண்ணாமலை

அண்ணாமலை

பாஜக எதிர்ப்பார்த்த இடங்களை தற்போதுவரை அதிமுக கூட்டணி ஒதுக்கவில்லை என்பதால் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீண்டும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் ஊரக, உள்ளாட்சிப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் கடந்த ஆண்டே நடத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் கடந்த 26-ம் தேதியன்று அறிவித்தது. வேட்புமனுத் தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இறுதி நாள் பிப்ரவரி 4-ம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன.

    தி.மு.க சார்பில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் பேச்சுவார்த்தையை நடத்திமுடித்துள்ளது. இந்தநிலையில், அ.தி.மு.க, பா.ஜ.க இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நேற்று சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமையகத்தில் வைத்து நடைபெற்றது. நேற்றைய பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளுக்கும் இடையை சுமூக உடன்பாடு ஏற்படவில்லை. இந்தநிலையில், இன்று அ.தி.மு.க, பா.ஜ.க இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின்போது, பா.ஜ.கவுக்கு அதிகபட்சம் 15 சதவீதம் இடங்கள் வரை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தது.

    4 மேயர் இடங்களையும் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், 5 சதவீத அளவுக்கு மட்டுமே இடத்தை ஒதுக்க முடியும் என்று அ.தி.மு.க தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டது. 5 சதவீத அளவிற்கு மட்டுமே இடங்கள் கிடைப்பதால் பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் கூட்டணியை கைவிட வலியுறுத்தியதாக பா.ஜ.க வட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.

    தனித்துப் போட்டியிட்டால் அதிக இடங்களில் வெற்றி பெறமுடியும் என மூத்த தலைவர்கள் பாஜக தலைவர் அண்ணாமலை இடம் கூறியதால் கூட்டணி குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி முடிவை பாஜக தலைவர் அண்ணாமலை, தேசிய பாஜகவிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க உள்ளார் எனவும் மூத்த தலைவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் பா.ஜ.க வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
    Published by:Karthick S
    First published:

    Tags: ADMK, Annamalai, BJP, Local Body Election 2022

    அடுத்த செய்தி