மதுரை வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோயில் பிரியாணி திருவிழா: பக்தர்கள் பரவசம்

மதுரை வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோயில் பிரியாணி திருவிழா: பக்தர்கள் பரவசம்

பிரியாணி திருவிழா

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 120ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு, 2500 கிலோ பிரியாணி அரிசியில், அசைவ பிரியாணி அண்டா அண்டாவாக தயார் செய்து பக்தர்களுக்கு அன்னதானம்.

 • Share this:
  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம் பட்டி ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோயிலில், 86வது ஆண்டு பிரியாணி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்து பரவசம் அடைந்தனர்.

  திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ முனியாண்டி சுவாமி திருக்கோவிலில் ஆண்டு தோறும் தைமாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று ஒரு தரப்பினரும், மாசி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை மற்றொரு தரப்பினரும்  நடத்தி வரும் விழாவான பிரியாணி திருவிழா, வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

  86வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவிற்கு, பக்தர்கள் ஒருவாரம் காப்புகட்டி, விரதம் மேற்கொள்வர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை விரதமேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து தாங்கள் கொண்டு வந்த பாலை சுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

  மாலை நடைபெற்ற விழாவில், கோவில் நிலைமாலையுடன் கிராம இளைஞர்கள் ஆட்டம் பாட்டத்துடன் பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களிலில் இருந்து எடுத்துவந்த தேங்காய், பழம், பூதட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்து, நிலைமாலையை கோயிலில் வைத்து சுவாமிக்கு தேங்காய் உடைத்து சாமிதரிசனம் செய்தனர்.

  இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா கேரளா உள்ளிட்ட பல இடங்களில் ஸ்ரீமுனியாண்டிவிலாஸ் ஹோட்டல் நடத்தி வருபவர்கள் மற்றும் உள்ளுர் மக்கள் உட்பட, ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

  விழாவின் நிறைவாக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 120ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு, 2500 கிலோ பிரியாணி அரிசியில்  அசைவ பிரியாணி அண்டா அண்டாவாக தயார் செய்து பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்குவார்கள்.

  இந்த அன்னதானத்தில் கள்ளிக்குடி, வில்லூர், அகத்தாபட்டி உள்ளிட்ட அருகில் உள்ள கிராமத்தினர் ஆயிரக்கணக்கானோர் அன்னாதனத்தில் கலந்துகொண்டனர். இந்த விழாவிற்காக தமிழகம் முழுவதும் உள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படுவது வழக்கம்.

  விழாவுக்கு வந்திருந்த பக்தர்கள் கூறுகையில், “முனியாண்டி சுவாமியை வணங்கினால் வேண்டுதல் அனைத்தும் நிறைவேறும். வேண்டுதல் நிறைவேறியதற்காக பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடுகள் மற்றும் கோழிகள் பலியிட்டு அசைவ பிரியாணி தயார் செய்து ஜாதி மத பேதமில்லாமல் அனைவருக்கும் வழங்கும் ஒரு நிகழ்ச்சி.  இந்த பிரியாணியை சாப்பிடுபவர்களுக்கு நோய் நொடிகள் அண்டாது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

  மேலும், விழாவையொட்டி தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா கேரளா கர்நாடகா மற்றும் சிங்கப்பூர் மலேசியா என பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். இதன் மூலம் இந்த விழாவில் பெண் பார்க்கும் படலமும் நடைபெறும்” என  தெரிவித்தனர்.

  Must Read: Chennai Book Fair 2021 | சிறுவர்களுக்கு பாட்டி கதை சொல்லும் "தும்பி": ஆர்வத்துடன் புத்தகங்களை வாங்கிச் செல்லும் வாசகர்கள்!

   

  மேலும், இந்த கொரோனா காலத்திலும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து முனியாண்டி சுவாமியை தரிசித்ததாக வடக்கம்பட்டி கிராம மக்கள் தெரிவித்தனர்.
  Published by:Suresh V
  First published: