BIRD FLU OR AVIAN FLU THREAT PREVENTIVE MEASURES INSIDE TAMILNADU AND WHATABOUTS MG
அச்சுறுத்தும் பறவை காய்ச்சல்.. தமிழகத்தில் பரவாமல் இருக்க எடுக்கப்பட்டு வரும் தடுப்புப்பணிகள் என்னென்ன?
மாதிரி படம்
தமிழ்நாடு, காஷ்மீர், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, காஷ்மீர், குஜராத் மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில், காக்கை, கோழி, வாத்து உட்பட 46,000 மேற்பட்ட பறவைகளுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பறவை காய்ச்சலால் மனிதர்களுக்கும் ஆபத்து உண்டாகும் என கண்டறியப்பட்டுள்ளதால் மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. அத்துடன், பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பறவைகளை கொல்லும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது
கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாக பரவுவதால், அங்கிருந்து கோழி உள்ளிட்ட பறவைகள், கோழி தீவனம் ஏற்றிக்கொண்டு தமிழகம் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. அத்துடன், தமிழக எல்லைகளில் 26 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைந்து கண்காணிக்கப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக, கேரளாவில் இருந்து கோழி மற்றும் முட்டைகளை ஏற்றி வரும் வாகனங்கள் கன்னியாகுமரி மாவட்டம் படந்தலுமூடு சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டன. மற்ற வாகனங்களுக்கு குளோரின் டை ஆக்ஸைடு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.
பறவை காய்ச்சல் - தடுப்பு பணிகள்
தென்காசி மாவட்டம் புளியரையில் சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு மேற்கொண்டார். இதேபோன்று, கேரள எல்லையான திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டையை அடுத்து, ஒன்பதாறு செக்போஸ்ட் பகுதியில் கால்நடைத்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். உதகையில் தமிழக - கேரள எல்லை மற்றும் கர்நாடக எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில், கால்நடை துறையினர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமக்கலில் உள்ள அனைத்து கோழி பண்ணைகளிலும் நோய் பரவல் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வடமாநிலங்களிலும் பறவை காய்ச்சல் வேகமாக பரவியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரண் மாவட்டத்தில், 50 காக்கைகள் மற்றும் புறாக்கள் உயிரிழந்தன.
இமாச்சலபிரதேசத்தில் போங் டாம் ஏரியில், உயிரிழந்த இரண்டாயிரத்து 400க்கும் மேற்பட்ட பறவைகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், கேரளா, ராஜஸ்தான், அரியானா, மத்திய பிரதேசத்தை தொடர்ந்து 5-வது மாநிலமாக இமாச்சல பிரதேசத்தில் பறவை காய்ச்சல் பரவியுள்ளது.
பறவை காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக, டெல்லியில் மத்திய கால்நடைத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, காஷ்மீர், குஜராத் ஆகிய மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.