• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 50 ஆண்டுகால அரசியல் போராட்டம்.. மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை!

50 ஆண்டுகால அரசியல் போராட்டம்.. மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதை!

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

1984ம் ஆண்டில், முதல்முறையாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் களமிறங்கிய மு.க.ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

  • Share this:
    14 வயதில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய மு.க.ஸ்டாலின், எடுத்தவுடன் உயர்மட்ட பதவிகளுக்கு வந்துவிடவில்லை, அவருக்கு வெற்றிகளும் சாதாரணமாக கிடைத்துவிடவில்லை, பல போராட்டங்களை கடந்து, அதில் கிடைத்த அனுபவங்களை கொண்டு படிப்படியாக அரசியலில் வளர்ந்து, தற்போது கம்பீரமான தலைவராக மிளிர்கிறார்.

    மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதிக்கும் தயாளு அம்மாளுக்கும் மார்ச் 1, 1953-ம் ஆண்டு மூன்றாவது மகனாக பிறந்தார் மு.க.ஸ்டாலின். ரஷ்ய அதிபர் ஸ்டாலின் நினைவாக இவருக்கு இந்தப் பெயரை சூட்டினார் கருணாநிதி. சென்னை சேத்துப்பட்டிலுள்ள கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார் ஸ்டாலின். பின் விவேகானந்தா கல்லூரியில் பி.யூ.சி படிப்பையும், மாநிலக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். அரசியல் தலைவர்கள் பலராலும் தூக்கி வளர்க்கப்பட்ட காரணத்தால் சிறுவனாக இருக்கும்போதே ஸ்டாலினுக்கு அரசியல் ஆர்வம் தொற்றிக்கொண்டது.

    இதன் விளைவாக, 1966-ம் ஆண்டு, தனது 14-வது வயதில் ` தி.மு.க இளைஞர் குழு' என்ற சிறு குழுவை கோபாலபுரத்தில் தொடங்கினார் ஸ்டாலின். இந்தக் குழு மூலம் இளைஞர்களை ஒன்று திரட்டி திராவிடக் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்தார். சமூகப் பணிகளையும் இந்தக் குழு செய்துவந்தது. இதையடுத்து, 1967-ல் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது தி.மு.க-வுக்காக தேர்தல் பிரசாரம் செய்தார். அதைத் தொடர்ந்து, முதல் கட்சிப் பதவியாக சென்னை 75-வது வட்ட தி.மு.க-வின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

    அதன் பின்னர், 1973-ம் ஆண்டு தி.மு.க-வின் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1976-ல் எமெர்ஜென்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, சிறை சென்றார். சென்னை மத்தியச் சிறையில் கிட்டதட்ட ஓராண்டு காலத்தைக் கழித்தார் ஸ்டாலின். இந்த சமயத்தில் தான் கலைஞரின் மகன் என்பதை தாண்டி, ஸ்டாலினுக்கு என அரசியலில் தனி இடம் கிடைத்தது.

    அந்த சமயத்தில் தி.மு.க-வுக்கு தொழிற்சங்கம், மாணவர் அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகள் இருந்தபோதிலும், அந்தக் கட்சிக்கு நீண்ட காலமாக இளைஞர் அமைப்பு இருக்கவில்லை. இதையடுத்து, 1980-ம் ஆண்டு திமுக இளைஞரணி உருவானது. 1980-ம் ஆண்டு  திமுக இளைஞர் அணியை கருணாநிதி தொடங்கிவைத்தார். அதற்கு உடனடியாக நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. 1982-ம் ஆண்டு இளைஞரணியின் அமைப்பாளராகத் தேர்வானார் ஸ்டாலின்.

    ஆரம்பத்தில் திமுக இளைஞரணியின் அமைப்பாளராகத் செயல்பட்ட மு.க. ஸ்டாலின், 1984ல் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் நீண்ட காலமாக திமுகவின் இளைஞரணி செயலாளராக செயல்பட்டார். தொடர்ந்து, அந்த சமயங்களில், திராவிடக் கொள்கைகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்லும் வகையில், முரசே முழங்கு, நாளை நமதே உள்ளிட்ட சில மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார். அதேபோல சமூக கருத்துகள் நிறைந்த ஒரே ரத்தம், மக்கள் ஆணையிட்டால் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

    1984-ஆம் ஆண்டில், முதல்முறையாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட மு.க. ஸ்டாலின் வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் 1989-ம் ஆண்டு மீண்டும் அதே ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எனினும், 1990-ம் ஆண்டு தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டதால், 5 ஆண்டுகள் முழுமையாக எம்.எல்.ஏ பதவியை அவர் வகிக்க முடியாமல் போனது. அதன் பின்னர் 1991ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தார் மு.க.ஸ்டாலின்.

    பின்னர் 1996 சட்டமன்றத் தேர்தலில் அதே தொகுதியில் வெற்றிபெற்றார். அதே ஆண்டில், சென்னை மாநகராட்சி மேயராகவும் தேர்வானார். 2001-ம் ஆண்டு மீண்டும் சென்னையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002-ம் ஆண்டு இரட்டைப் பதவிக்கு எதிராக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டம் கொண்டுவர, மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.எல்.ஏவாகப் பணியைத் தொடர்ந்தார். இதனிடையே, 2003ம் ஆண்டு தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

    தொடர்ந்து 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்றதை அடுத்து முதன்முறையாக அமைச்சர் பொறுப்பேற்றார் ஸ்டாலின். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்துவந்தார். 2008ம் ஆண்டு தி.மு.க பொருளாளராகவும் பதவிப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து,.2009-ம் ஆண்டு துணை முதலமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். பலமுறை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின், முதன்முறையாக 2011-ம் ஆண்டு கொளத்தூர் தொகுதிக்கு மாறினார். 2011, 2016 ஆகிய இரண்டு முறையும் கொளத்தூர் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ-வாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

    மு.க.ஸ்டாலின்


    பின்னர், 2016 சட்டமன்றத் தேர்தலில் 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார். கருணாநிதியின் வயது மூப்பு காரணமாக 2017-ல் தி.மு.க-வின் செயல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஸ்டாலின். இதையடுத்து, 2018 தி.மு.க தலைவர் கருணநிதியின் மறைவுக்குப் பிறகு, தி.மு.க தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

    இதையடுத்து, நேரடியாக மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக களம்கண்ட முதல் தேர்தலான 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணி, தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளில், 38 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது.

    இதையடுத்து, தற்போது நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவரது தலைமயின் கீழ் தேர்தலை சந்தித்த திமுக கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து, தமிழகத்தின் முதல்வராக நாளை மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார்.

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: