பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்த நிலையில் பல இடங்களில் சர்வர் பிரச்னை காரணமாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக தான் டோக்கன் விநியோகிக்கும் பணி கடந்த ஜனவரி 02 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. ஆனால் பல இடங்களில் கைரேகை பதிவு செய்வதில் சிக்கல் மற்றும் சர்வர் பிரச்னை காரணமாக பொங்கல் பரிசு ரூ.1000 பெறுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து அந்த துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, ரூ.1,000 ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தெடங்கி வைத்தார். ஜனவரி 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை பொங்கல் பரிசு வழங்கப்படவுள்ளது. குறிப்பிட்ட நாட்களில் பொங்கல் பரிசு பெறாதவர்கள் ஜனவரி 15 ஆம் நாள் பொங்கல் பண்டிகையை அடுத்து ஜனவரி 16 ஆம் நாள் பெற்றுக்கொள்ளலாம் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடங்கிய முதல் நாளே சர்வர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யும் பணி முடங்கியது. தேனி, சிவகங்கை, திருவள்ளூர், திருச்சி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் சர்வர் பிரச்னை காரணமாக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிரமத்தை சந்தித்துள்ளனர். இதையடுத்து சாதரண முறையில் அவர்களின் ரேஷன் கார்டு எண்ணை குறித்து கொண்டு பொங்கல் தொகுப்பை வழங்க வட்டாட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
முதல் நாள் பொங்கல் தொகுப்பு வாங்க பொதுமக்கள் குவிந்ததால் சர்வர் பிரச்னை ஏற்பட்டுள்ளதால் அடுத்து வரும் நாட்களில் இதுப்போன்ற சிரமங்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளப்படும் என்று உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pongal 2023, Pongal Gift