முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வாகன சோதனையின் போது போலீஸ் தாக்கியதில் இளைஞர் மரணம்!

வாகன சோதனையின் போது போலீஸ் தாக்கியதில் இளைஞர் மரணம்!

விவேகானந்த குமார்

விவேகானந்த குமார்

  • 1-MIN READ
  • Last Updated :

இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை சோதனை செய்வதற்காக தடுத்த போலீசார் லத்தியால் தாக்கியதில் படுகாயம் அடைந்த வாலிபர், சிகிச்சைப் பலனின்றி பலியானார்.

மதுரைஆலங்குளத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தகுமார்(35). சிம்மக்கல் பகுதியில் டயர் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். தினமும் இரவு கடையை அடைத்துவிட்டு பணியாளர் சரவணக்குமார் (28) என்பவருடன் பைக்கில் வீடு திரும்புவது வழக்கம். கடந்த சனியன்று இரவு 11 மணியளவில் கடையை வழக்கம் போல் அடைத்துவிட்டு வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அண்ணாமலை தியேட்டர் வைகை பாலத்தில் நின்று கொண்டிருந்த திலகர் திடல் போலீசார், சோதனைக்காக அவர்கள் வந்த பைக்கை நிறுத்த முயன்றுள்ளனர். வேகமாக வந்த அவர்கள் திடீரென பைக்கை நிறுத்த முடியாமல் மெதுவாக பைக்கை நிறுத்த முயற்சித்த போது பைக் போலீசாரை கடந்துள்ளது.

அப்போது அடுத்தடுத்து நின்றிருந்த போலீசாரை பைக் கடந்து நிற்பதற்குள், மூன்றாவதாக நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் ஒருவர், தப்பி ஓடுவதாக நினைத்து லத்தியால் ஓங்கி அடித்துள்ளார். அந்த அடி பைக்கை ஓட்டி வந்த சரவணக்குமாரின் நெஞ்சில் பட்டு நிலைதடுமாறினார். பைக் கீழே விழுந்ததில் இருவரும் சரிந்தனர். உடன் அமர்ந்திருந்த சரவணக்குமார் சுதாரித்து எழுந்த நிலையில், நெஞ்சில் அடிபட்ட விவேகானந்தகுமாருக்கு தலையிலும் அடிபட்டு பேச்சு மூச்சின்றி மயங்கினார். கீழே கிடந்த அவரை தங்களது வாகனத்தில் ஏற்றிச் செல்ல முன்வராத போலீசார், ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருந்தனர்.

நீண்ட நேரத்திற்கு பின் வந்த ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவேகானந்தகுமார், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.

திருமணமாகி ஒன்றரை வயதான ஆண் குழந்தையுடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்த விவேகானந்தகுமாரின் உயிரை தங்களது அதிகாரப் பசிக்கு போலீசார் பலி கொடுத்துள்ளனர். தமிழகத்தில் தொடர்ச்சியாக போலீசாரின் அதிகாரப் பசிக்கு பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கேட்டு அவரது உறவினர்கள் நேற்று மருத்துவமனை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து பிரச்னையை அப்போது சமாளித்த போலீசார், அதன் பின் அந்தக் குடும்பத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மதுரை தல்லாகுளம் போக்குவரத்து போலீசார், ‘பைக் நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்பட்டதாக, ’முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். சக போலீசாரை காப்பாற்றும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள போலீசாரின் இந்த படுபாதக செயல் குறித்து இறந்த விவேகானந்தகுமாரின் தந்தை தங்கவேல் தனது மருமகளுடன் சென்று குறைதீர்க்கும் கூட்டத்தில் புகார் மனு அளித்துள்ளார். மேலும் போலீசாரின் தவறான அணுகுமுறையால் உயிரிழந்த தனது மகனின் மனைவிக்கு அரசு வேலை வழங்கவும் கோரிக்கை வைத்துள்ளார்.

விவேகானந்தகுமாரின் உயிரை பறித்த அதே போலீஸ் சோதனைக்குழு, தினமும் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளிடம் இதேபோன்ற அணுகுமுறையைக் கையாண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட போலீசார் குறித்த விபரங்களை ரகசியம் காத்து வருகிறது காவல்துறை. இதுகுறித்து விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகளிடம் கேட்ட போது, விசாரணை நடந்து வருவதாகவும், பின்னர் தெரிவிப்பதாகவும் முடித்துக் கொண்டனர். பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய போலீசாரே, அவர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் சூழல் அதிகரித்து வருவது வருந்தக்கூடிய நிகழ்வாகும்.

வீடியோ பார்க்க: காதல் முதல் அரிவாள் வெட்டு வரை... சேத்துப்பட்டு ரயில்நிலையத்தில் நடந்தது என்ன?

First published:

Tags: Atrocities of Police, Dead, Madurai