பீகாரில் மசூதி ஒன்றில் காவிக் கொடி ஏற்றப்பட்ட சம்பவத்திற்கு நடிகையும்
பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த செயலில் ஈடுபட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பீகார் மாநிலத்தில் ராமநவமியையொட்டி பலரும் காவி கொடியை கையில் ஏந்தியபடி வாகனங்களில் ஊர்வலமாக சென்றுள்ளனர். அப்போது முசாப்பூர் பகுதியின் முகமதுபூர் கிராமத்தில் உள்ள டக் பங்களா மஸ்ஜித் அருகே வந்தபோது, இளைஞர் ஒருவர் மசூதியின் சுவர் மீது ஏறி கோபுரத்தில் காவிக்கொடியை கட்டினார்.
அங்கிருந்தவர்கள் இந்த செயலை தடுக்காமல் உற்சாகமாக கோஷம் எழுப்பினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும் பதற்றமான சூழலையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக முசாப்பூரின் மூத்த காவல் கண்காணிப்பாளர் ஜெயந்த் கண்ட் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துவரும் சூழலில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்புவும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், இதுபோன்ற செயல்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால், இதற்கு
பாஜக காரணம் எனக் கூறுபவர்கள் மண்டைக்குள் மூளையை வைக்க வேண்டும். இது பாஜக அல்ல. எங்கள் கட்சி இதனை ஊக்குவிப்பதில்லை. நமது பிரதமர் மோடி சமத்துவம், வளம் மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டின் மீது மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளார்' என்று கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.