போகிப் பண்டிகைக் கொண்டாட்டம்: புகை மண்டலமாக காட்சியளித்த சென்னை

போகிப் பண்டிகைக் கொண்டாட்டம்: புகை மண்டலமாக காட்சியளித்த சென்னை

புகை மண்டலமாக காட்சியளிக்கும் சென்னை

சென்னை போகிப் பண்டிகைக் கொண்டாடப்பட்ட நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகள் புகை மண்டலமாக காட்சியளித்தது.

  • Share this:
தமிழகம் முழுவதும் பொங்கலுக்கு முந்தைய நாள் 'பழையன கழித்து, புதியன புகுவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் போகிக் பொங்கல் கருதப்படுகிறது. அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகையாகும்.

வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.

இவற்றோடு பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் அக்னி குண்டத்தில் எறிந்து பொசுக்கி வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

பல்வேறு தெய்வீக குணங்களை தூண்டுவதன் மூலம் ஆன்மாவை உணர்தல், ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது. இதையொட்டி சென்னையில் அதிகாலை முதலே மக்கள் வீடுகளுக்கு முன்பு பழைய பொருட்களை எரித்து போகிப் பண்டிகை கொண்டாடினர், பிளாஸ்டிக், டயர், ரப்பர் போன்ற காற்று மாசு ஏற்படுத்தும் பொருட்கள் மக்கள் எரிக்க கூடாது என மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியிருந்தது.

தடை செய்யப்பட்ட பொருட்களை மக்கள் எரிக்கின்றார்களா என கண்கானிக்க 36 குழுக்களை அமைத்திருப்பதாகவும்  மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அதிகாலை ஒரே நேரத்தில் மக்கள் அனைவரும் பழைய பொருட்களை எரித்ததால் சென்னை புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. கடும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் கண்களில் எரிச்சல் ஏற்படுவதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

சென்னை ஈக்காட்டுதாங்கலைக் கடக்கும் அடையாறு பகுதி முழுமையாக பனிப்பொழிவுடன் கலந்த புகை மண்டலமாக காட்சியளித்தது. சாலைகளே தெரியாத அளவிற்கு புகை சாலைகளை ஆக்ரமித்திருந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

போகிப் பண்டிகையை தவிர்க்க முடியாது என்ற போதிலும் சுற்றுச்சூழலுக்கும் இயற்கைக்கும் பாதகம் விளைவிக்காத வகையில் காற்று மாசுபடாத வகையில் போகி கொண்டாட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. சம்பிரதாயத்திற்காக குறைந்த அளவிலான பொருட்களை வீட்டின் முன்பு எரித்துவிட்டு தேவையற்ற பழைய கழிவு பொருட்களை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் இடம் வழங்க வேண்டும் என சென்னை பெருநகர மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல் பிளாஸ்டிக் ரப்பர், டயர் போன்ற பொருட்களை எரித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தடையை மீறி தடை செய்யப்பட்ட பொருட்களை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமல்லாமல் அபராதமும் விதிக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: