தமிழர் விழாக்களில் மிக முக்கியமான பொங்கல் பண்டிகையின் தொடக்கம் போகிப் பண்டிகை. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்கிற பழமொழிக்கு ஏற்ப மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். எனினும், காற்று மாசு ஏற்படும் என்பதால் பழைய பொருட்களை எரிக்காமல் போகி கொண்டாடுமாறு அரசு அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் பல இடங்களில் பொதுமக்கள் தங்கள் வீட்டில் பயன்படுத்திய பழைய பொருட்களை தீயிட்டு எரித்து போகி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சிறுவர்கள் மேளம் அடித்து உற்சாகமாக எரிகிற தீயில் குளிர் காய்ந்த படி போகியை கொண்டாடினர். சென்னையின் பல பகுதிகளில் அதிகாலையில் பழைய பொருட்களை ஆங்காங்கே எரித்ததால் மாநகரம் முழுக்க பனி மூட்டத்துடன் கடும் புகை மூட்டமும் சேர்ந்து காணப்பட்டது. இதேபோல ஆவடி, அம்பத்தூர் பகுதிகளிலும் பொதுமக்கள் தங்கள் பழைய பொருட்களை எரித்துப் போகியை கொண்டாடினர். சென்னையில் 15 இடங்களில் காற்றின் தரத்தை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் பொருட்களை கொளுத்துவதால் காற்றின் தரம் மோசமடைந்து வருவதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. ஆலந்தூர், மணலி, கொடுங்கையூர், பெருங்குடியில் காற்றின் தரக்குறியீடு அளவு 100 - ஐத் தாண்டியுள்ளது. காற்று மாசை குறைக்க பிளாஸ்டிக், டயர் ஆகியவற்றை எரிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூரில் பொங்கல் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும்போது, வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி இன்று அதிகாலையில் தீயிட்டு கொளுத்தினர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் வீடுகள் தோறும் பழைய பொருட்களை வாசல் முன்பு போட்டு தீ வைத்து கொளுத்தி தைத்திருநாளை வரவேற்கும் விதமாக போகி திருநாளை உற்சாகமாகக் கொண்டாடினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bhogi, Chennai, Pongal 2023