தமிழக பா.ஜ.க தலைவராக இருக்கும் அண்ணாமலை, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, 'முறைகேடு' புகாரை முன்வைத்தார். அதில், 'தற்போது நலிவடைந்துள்ள நிலையிலுள்ள ஒரு மின்நிலையத்தை, ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர் வாங்கி, அதன் வாயிலாக, ரூ.5,000 கோடிக்கு மின்சாரம் விற்க, தமிழக மின்வாரியத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஆளுங்கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்களும் லாபத்தை ஈட்டுவதற்காகத்தான் இந்த ஒப்பந்தம் நடக்கிறது.
எந்த நிறுவனம், எந்த அமைச்சர் என்ற பெயரை தற்போது வெளியிட விரும்பவில்லை. திரும்பவும் 2006 -11 பாதைக்குப் போக மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படிப் போகும்போது, பா.ஜ.க-வுக்கு வேறு வழியில்லை, ஒப்பந்தப் பேச்சு குறித்து எங்களிடம் உள்ள ஆவணங்களை மக்கள் முன் வெளியிடுவோம்' என்று பேசியிருந்தார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனையடுத்து, ஆதாரம் இருந்தால் அண்ணாமலை வெளியிட வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியிருந்தார். அதனையடுத்து, மின்சார வாரியம் சார்பில் வழங்கப்பட்ட பண பட்டுவாடா விவரங்கள் கொண்ட எக்செல் சீட் ஒன்றை அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டார். இருவருக்கும் இடையே வார்த்தைப் போர் உச்சக்கட்டத்தை அடைந்தது.
மின்சாரத்துறையில் ஊழல் நடக்கிறது. மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்திவந்தார். இந்தநிலையில், பி.ஜி.ஆர் நிறுவனத்துக்கு எதிராகவும் அண்ணாமலை பேசியிருந்தார். இந்தநிலையில், அண்ணாமலை 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று பி.ஜி.ஆர் நிறுவனம் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளது.
Sir. You have sued me for 500 Crore!
Im a simple farmer with a couple of sheep’s in my farm & not worth that much like @arivalayam’s corrupt ministers for whom corruption-commission-cut money has become a way of life!
இதுதொடர்பாக அண்ணாமலைக்கு அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீஸில், ‘பி.ஜி.ஆர் நிறுவன இயக்குநர் ரமேஷ் குமார் குறித்து ட்விட்டரில் அவதூறாக பதிவிட்டு அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால் 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்கவேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, ‘சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள். நான் ஒரு சாதாரண விவசாயி. என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான். தி.மு.க அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை. நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது. சந்திப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.