ஊரடங்கால் கொடியிலேயே அழுகும் வெற்றிலை... விவசாயிகள் வேதனை!

கோப்புப் படம்

பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் வெற்றிலை பறிக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

 • Share this:
  ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து தடைபட்டதாலும், கடைகள் மூடியதாலும் வெற்றிலை கொடியிலேயே அழுகி வருகிறது. இதனால் வெற்றிலையைப்போல் அதை பயிரிட்ட விவசாயிகளும் வாடிப்போயுள்ளனர்.

  தமிழத்தில் எல்லா சுப காரியங்களும் வெற்றிலை உடன்தான் தொடங்கும். அப்படிப்பட்ட வெற்றிலையை ஊரடங்கு உத்தரவால் வெளியூர்களுக்கு கொண்டு செல்ல முடியாமல் பழுத்து கொடியிலேயே வீணாகி வருகிறது.

  மதுரை மாவட்டம் சோழவந்தான் வெற்றிலைக்கு மிகவும் பெயர் பெற்றது. சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், இஞ்சி பட்டி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 150 ஏக்கருக்கு மேல் வெற்றிலை விவசாயம் நடைபெற்று வருகிறது.

  இப்பகுதியில் விளையும் வெற்றிலை தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் அனுப்பப்படுவது வழக்கம். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட பல்வேறு தொழில்களில் வெற்றிலை விவசாயமும் ஒன்றாகும்.

  எந்த போக்குவரத்தும் இல்லாததால் வெற்றிலையை பறித்து வெளியூர்களுக்கு அனுப்ப முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். வெற்றிலை பறிக்கப்படாமல் கொடியிலேயே விடுவதால் நோய் தாக்குதலுக்கு ஆளாகி அழுகும் நிலைக்கு சென்றுவிட்டது. எனவே அரசு உடனடியாக தலையிட்டு இதற்கு நல்ல தீர்வு காண வேண்டும் என வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  கருப்பட்டி பகுதியிலிருந்து நாள்தோறும் ஆயிரம் கிலோ வெற்றிலை ஏற்றுமதி செய்யப்படும். ஆனால் தற்பொழுது வெற்றிலை தொழில் முற்றிலும் முடங்கியதால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் வெற்றிலை பறிக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

  Also see...
  Published by:Vinothini Aandisamy
  First published: