சேலம் நெத்திமேடு பகுதியில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி வந்திருந்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் மீது அவதூறாக பேசிய எடப்பாடி பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, ’முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் உள்ளவர்கள் குடும்ப ஆதிக்கம் அதிகம் உள்ளது என்று கூறலாம். தமிழகத்தில் ஒரு முதலமைச்சர் மட்டுமில்லை. நான்கு முதலமைச்சர்கள் ஆட்சி செய்து வருகின்றனர் என்று பேசியுள்ளார். குறிப்பாக உதயநிதி ஸ்டாலின், சபரீசன் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகிய நான்கு பேர்களும் முதலமைச்சர்களாக ஆட்சி செய்து வருகின்றனர் என்று சேலம் நிலவாரப்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். இவ்வாறு பேசுவது ஜனநாயக படுகொலை.
கடந்த 4 ஆண்டுகாலமாக தமிழக முதலமைச்சராக பொறுப்பு வகித்த எடப்பாடி பழனிச்சாமி பற்றி அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் எப்போதும் குடும்பத்தை பற்றி விமர்சனம் செய்ததில்லை. ஆனால் தற்போது முதல்வர் குடும்பத்தைப் பற்றி விமர்சனம் செய்துள்ளார்.
ஆனால் இவ்வாறு பேசியும் தமிழகத்தில் ஆளும் கட்சி ஏன் அமைதியாக இருக்கிறது என்று தெரியவில்லை என்றார்.
எனது வாழ்நாளில் நான் தோற்கடிக்க வேண்டிய ஒரு நபர் எடப்பாடி பழனிச்சாமி என்று விமர்சனம் செய்த அவர், ஆளும் கட்சி குற்றச்சாட்டு வைக்காத நிலையில் புகார் அளித்து வந்துள்ளீர்களே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, நியாயம் என்ற பெயரிலேயே புகார் அளிக்க வந்துள்ளேன் என்றார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர்களை முதலமைச்சர்கள் என்று அவதூறாகப் பேசியது தேசத்துரோக குற்றம் என்று கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியின் உத்தரவின்படி, அதிமுக பொதுக்குழு நடைபெறும் என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று சட்டத்தில் இல்லாத பதவிகளை உருவாக்கியுள்ளனர். ரவுடிகளை வைத்து அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எனவும் பேசினார்.
பாஜக தலைவர் அண்ணாமலை ஜோக்கர் போன்றவர். ஆனால் இவர் ஐபிஎஸ் படித்தவரா என்ற கேள்வி எழுகிறது. மற்றவர்களை தரம் தாழ்த்தி பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதிமுக உதவியுடனே 4 சீட்டுகளை பாஜக வெற்றி பெற்றது. பாஜக தனித்து நின்று வெற்றி பெற்று காட்ட வேண்டும். பாஜகவிற்கு அடிமையாக அதிமுக செயல்பட்டு வருவதில் சந்தேகமில்லை எனவும் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Edappadi Palaniswami, Pugazhendhi